16 கி.மீ. தொலைவு மலையில் நடந்து கேதார்நாத் கோவிலில் ராகுல் காந்தி தரிசனம்

Published:

rahul-kedarnathகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 16 கி.மீ. தொலைவு மலையில் நடந்து சென்று கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இரு தினங்களுக்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலம் இமய மலைப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தலமான கேதார்நாத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் 11ஆவது தலம் இது. டேராடூன் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் மாலை ஹெலிகாப்டர் மூலம் கவுரிகுண்ட் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்து மலைப்பகுதி வழியாக தனது பயணத்தைத் தொடர்ந்தார். லிங்கோலி வரையுள்ள 10 கி.மீ. தொலைவு கரடு முரடான மலைப்பகுதியில் நடந்தே சென்று, நேற்று முன்தினம் இரவு அங்கே அனைவரும் ஓய்வெடுத்தனர். பின்னர் நேற்று காலை லிங்கோலியில் இருந்து கேதார்நாத் வரையுள்ள 6 கி.மீ. தொலைவு அவர்கள் நடந்தே சென்று கோவிலை அடைந்தனர். நேற்று அதிகாலை 4.50க்கு பக்தர்கள் தரிசனத்துக்காக கேதார்நாத் கோவில் திறக்கப்பட்டது. கோவிலின் தலைமை பூசாரி ரவால் சம்பிரதாய முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க, ருத்ர பிரயாக் மாவட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் கருவறையைத் திறந்தார். மாநில ஆளுநர் கே.கே.பால், முதல்வர் ஹரீஷ் ராவத், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சூஃபி பாடகர் கைலேஷ் கெர், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கேதார்நாத் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தால் அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அவமரியாதை செய்வதுபோல் ஆகும். எனவே பக்தர்கள் கேதார்நாத் கோவிலுக்கு நடந்த செல்லும் அதே பாதையில்தான் நானும் இன்று வந்தேன். இந்த மலைப்பாதையில் நாம் நடந்து வந்தால், இங்கே வந்திருக்கும் நமது சகோதரர்களுக்கும் இது நன்மை பயப்பதாக அமையும் என்பதால் நடந்தேன். மேலும் இனி இங்கே மக்கள் தாராளமாக வருவார்கள். அவர்களுடைய பயமும் கொஞ்சம் குறைய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர் கேதார்நாத் கோவிலில் என்ன வேண்டிக் கொண்டீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கோவிலில் எந்த வேண்டுதலையும் வைக்கவில்லை. இந்தக் கோவிலுக்குள் நுழைந்த உடனேயே எனக்குள் ஒரு சக்தி கிடைத்தது போன்ற உணர்வைப் பெற்றேன்” என்று கூறினார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img