கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகள் அல்ல..! பெரும்பாலும் தவறாகவே இருந்துள்ளன: வெங்கய்ய நாயுடு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
venkaiah naidu - 2026
கோப்புப் படம்:

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பவை தேர்தல் முடிவுகள் அல்ல… கடந்த காலங்களில் அவை பெரும்பாலும் தவறாகவே இருந்துள்ளன என்று கூறியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு!

மக்களவை தேர்தலில் வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில் நேற்று மாலை ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. அவற்றில் பெரும்பாலானவை, மத்தியில் மீண்டும் பாஜக., தலைமையிலான தே.ஜ.கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்தன. இதை அடுத்து அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் அடிக்கடி சந்தித்தனர். கூடிப் பேச ஏற்பாடுகள் நடந்தன.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பவை, தேர்தலின் சரியான முடிவுகள் அல்ல. கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தவறாகவே இருந்துள்ளன.

ஜனநாயகம் வலுப்பட வேண்டுமெனில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். அண்மைக் காலமாக, அரசியல் நாகரிகம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் பண்பாடு சிதைந்து காணப் படுகிறது. தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல, எதிர்ப்பாளர் மட்டுமே. இந்த அடிப்படை உண்மையைக் கூட அவர்கள் மறந்து விட்டனர்.

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் செயல்பாடுகளும், சட்டப்பேரவைகளில் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளும் கவலை அளிக்கிறது. அவர்கள், தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்வதில்லை.. என்று வேதனையை வெளியிட்டார் வெங்கய்ய நாயுடு!

மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சி வரும் என்ற கருத்துக் கணிப்புகளால் பாஜக., தொண்டர்கள் கடும் உற்சாகத்தில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்களுக்கு சூடு கொடுக்கும் வகையிலும் வெங்கய்ய நாயுடு இப்படிப் பேசியிருப்பதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.