வெள்ளிக்கிழமை இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்த பிரதமர் மோடி, அமைச்சரவை சகாக்களுடனான தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் அளித்தார்.
பிரதமர் மோடி அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அடுத்த அமைச்சரவை பொறுப்பேற்கும் வரையில் தொடருமாறு பிரதமர் மோடியைக் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, 16வது மக்களவையை கலைக்கும் தீர்மானம் பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப் பட்டது. தொடர்ந்து, 16வது மக்களவையைக் கலைக்க ஒப்புதல் தெரிவிக்கப் பட்டது.
17வது மக்களவைத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தே.ஜ.கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் வேட்பாளராக மோடியே முன்னிறுத்தப் பட்டார். இந்நிலையில் பாஜக., உயர் மட்டக் குழு கூடி, முறையாக மோடியைத் தேர்வு செய்யும் என்றும், தொடர்ந்து அமைச்சரவைக்கு உரிய நபர்கள் தேர்வு செய்யப் படுவர் என்றும் கூறப் படுகிறது.
இம்முறை அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் யார் யார் என்பது குறித்து தில்லி வட்டாரங்களில் அனுமானங்கள் நிலவுகின்றன.




