புது தில்லி: விவசாயிகளின் நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்படாது, அவற்றை நிச்சயமாக மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அளிக்காது; அவை விவசாயம் சார்ந்த பணிகளுக்கே எடுக்கப்படும் என்று பா.ஜ.க., தேசியத் தலைவர் அமித்ஷா கூறினார். பீகாரில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளுமே அங்கு வெற்றி பெற போட்டி போடுகின்றன. அனைத்து ஜனதா கட்சிகளையும் இணைத்து ஜனதா பரிவார் என போட்டியிட நிதிஷ், லாலு, முலாயம் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். பாஜகவும் தன் பங்குக்கு ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறது. இந்நிலையில், நிலம் கையகப் படுத்தும் மசோதா தொடர்பான எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், தங்கள் தரப்பு பிரசாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று தில்லி காந்தி மைதானத்தில் பாஜக., தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பேசினர். அந்தக் கூட்டத்தில் அமித் ஷா பேசியபோது, விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு அளிப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பிரசாரம் செய்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. விவசாயிகளின் ஒரு அங்குல நிலம்கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த நிலம் கிராமங்களின் மேம்பாட்டுக்காகவும், விவசாயிகளின் நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காகவுமே பயன்படுத்தப்படும். எதிர்க் கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்க பாஜக., தொண்டர்கள் இந்தத் தகவல்களை ஒவ்வொரு கிராமத்தில் உள்ள விவசாயிகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். பீகாரில் 12 சர்க்கரை ஆலைகளுக்குச் சொந்தமான நிலங்கள் எங்கே சென்றன என்பதை முதல்வர் நிதிஷ் குமார் விளக்க வேண்டும். ஆனால் அவரோ இந்த விஷயத்தில் தொடர்ந்து மௌனமாக இருந்து வருகிறார். அந்த நிலங்களை அவர் தனது நண்பர்களுக்கும், அமைச்சர்களின் உறவினர்களுக்கும் வழங்கியுள்ளார். இதனால் பீகார் மாநில மேம்பாட்டுக்கான ரயில்வே மற்றும் சாலைத் திட்டங்கள் முடங்கியுள்ளன என்றார்.
விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்படாது; விவசாயப் பணிகளுக்கே! : அமித் ஷா
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari