ராகுல் காந்தி ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்துடன் ஜாமீனில் விடுவிப்பு….!

இந்தியா

RAGUL - 2026
ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை என்ற ராகுலின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

கர்நாடக மாநிலம் பெங்ளூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55). இவர் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உளவுப்பிரிவு ஐ.ஜி பி.கே.சிங்.தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் துணை தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது கருத்து தெரிவித்தார்.

அப்போது, பாஜக, ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்களின் குரல் நசுக்கப்படுகிறது.

அவர்கள் தாக்கப்படுகிறார்கள். துன்புறுத்தப்படுகின்றனர். கொலை செய்யப்படுகின்றனர். மதவாத சக்திகளுக்கு எதிராக போராடியவர் கொல்லப்பட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்களை மீண்டும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்றார்.

மேலும் பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தமே எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு காரணம் என்று சீதாராம் யெச்சூரி கூறி இருந்தார்.

தொடர்ச்சியாக, ராகுல் பேச்சுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த ஹிருத்மான் ஜோஷி என்பவர், இருவரும் எந்த ஆதாரமும் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்.சின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசியதாக மும்பை மெட்ரோ பொலிட்டன் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல்காந்தி, யெச்சூரி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இருவர் தரப்பிலும் பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிணைய மனுவை பரிசீலித்த நீதிபதி, ராகுல் காந்தியை ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்துடன் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து முன்னாள் எம்பி ஏக்நாத் கெய்க்வாட் ராகுல் காந்திக்காக உத்தரவாதம் அளித்தார்.

மும்பையில் அவதூறு வழக்கில் ஆஜரான பின் நீதிமன்றத்திற்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு எதிரான தமது போராட்டம் முன்பை விட வீரியமாக தொடரும் என்று கூறினார். ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.