சவுரவ் கங்குலி – இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர்

saurav-ganguly புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த பயிற்சியாளர் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், சவுரவ் கங்குலி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக சவுரவ் கங்குலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்து விளையாடிய போது, இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் முத்திரை பதித்து பல வெற்றிகளை தேடித் தந்தார். மிகவும் ஆக்ரோஷமாக விளையாட்டை வெளிப்படுத்தும் கங்குலி, இளம் வீரர்கள் பலரையும் ஊக்குவித்து சாதனைகள் படைக்க உதவினார். கங்குலி கேப்டனாகப் பதவி வகித்த காலத்தில்தான், ஹர்பஜன், யுவராஜ், சேவக், காம்பீர், முகமது கைப் போன்ற திறமையான இளம் வீரர்கள் இந்திய அணிக்குக் கிடைத்தனர். இந்நிலையில், கங்குலி இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றால் திறம்படச் செயலாற்றுவார் என்று வீரர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் 26ஆம் தேதி பிசிசிஐ செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் கங்குலி குறித்து முடிவு எடுக்கப்படலாமென்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.