
கர்நாடகாவில், இன்று(ஜூலை 26) மாலை 6 மணிக்கு முதல்வராக எடியூரப்பா கடவுளின் மீது சத்தியம் செய்து பதவியேற்றார்.
அவருக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா மட்டும் பதவியேற்றார்.
எடியூரப்பா 4வது முறையாக முதல்வர் பதவி வகிக்கிறார்.
கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்., கூட்டணி ஆட்சி, கடந்த, 14 மாதங்களாக நடந்து வந்தது.
இம்மாத துவக்கத்தில், காங்., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த, 15 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததையடுத்து, கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின், 23ம் தேதி, சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து, ஆட்சியமைக்கும் முயற்சியில், முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா 76, ஈடுபட்டார்.
இது தொடர்பாக, கட்சி தலைமையின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும், உத்தரவு கிடைத்த பின், கவர்னரை சந்திக்கப் போவதாகவும், அவர், நேற்று முன்தினம்(ஜூலை 24) அறிவித்திருந்தார்.
நேற்று, சுயேட்சை மற்றும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று எடியூரப்பா, கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இன்று மாலை பதவியேற்றாலும், ஜூலை 31 ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எடியூரப்பாவிற்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
பாஜக தேசிய தலைமை சார்பாக மும்பையில் உள்ள 16 காங்கிரஸ் மற்றும் மஜத அதிருப்தி எம்எல்ஏக்களிடம் பேசி இருக்கிறார்கள். அதாவது 16 அதிருப்தி எம்எல்ஏக்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய அமித் ஷா, அதன் பின்பே ஆட்சி அமைக்க ஓகே சொல்லி இருக்கிறார்.
அதில் 16 அதிருப்தி எம்எல்ஏக்களும், நாங்கள் உறுதியாக எடியூரப்பா ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளனர்.
இன்னும் சிலர் கண்டிப்பாக காங்கிரஸ் – மஜத கூட்டணிக்கு செல்ல மாட்டோம். எடியூரப்பா ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் ஆதரவு அளிப்போம். இல்லையென்றால் ராஜினாமா செய்து அதன் மூலம் எடியூரப்பா ஆட்சி அமைக்க வழி வகுப்போம். என்று வீடியோ காலில் கூறியுள்ளனர்.
இந்த வீடியோ காலில் எம்எல்ஏக்கள் ஆதரவு உறுதியான பின்புதான் ஆட்சி அமைக்கும் திட்டத்தை அமித் ஷா கையில் எடுத்துள்ளார்.
இந்த வீடியோ காலின் போது ஜே பி நட்டா உள்ளிட்ட முக்கிய பாஜக உறுப்பினர்கள் உடன் இருந்துள்ளனர்.
இதுவே இன்று எடியூரப்பா ஆட்சி அமைப்பதற்கு பின்னணி என பா.ஜ.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



