3 நாடுகள் பயணம் முடித்து நாடு திரும்பினார் மோடி

modi-harpper புது தில்லி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாடுகளில் 9 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று தாயகம் திரும்பினார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடிக்கு. தலைநகர் தில்லியில் பா.ஜ,க தலைவர்களும் ஆதரவாளர்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, கடந்த வாரம் பிரான்ஸுக்குச் சென்று, பின்னர் ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார் மோடி. வெள்ளிக்கிழமை நேற்று தனது பயணத்தை நிறைவு செய்து, பிரதமர் நரேந்திர மோடி கனடாவில் இருந்து தாயகம் புறப்பட்டார். கனடாவில் இருந்து இந்தியா புறப்படும் முன்பாக டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்தபோது, கனடாவில் இருந்து திருப்தியுடன் புறப்படுகிறேன். இந்தப் பயணம், இந்தியா-கனடா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும். கனடா நாட்டு மக்களுக்கு நன்றி.

சிறந்த மனிதரும், அருமை நண்பருமான கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கு மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.  

மோடியின் இந்தப் பயணத்தில், பிரான்ஸூடன் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம், ஜெய்தாப்பூரில் அணு மின் திட்டத்தை தொடங்குவது உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜெர்மனியுடன் இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 டன் யுரேனியத்தை கனடா வழங்குவதற்கான ஒப்பந்தமும், மோடியின் இந்த பயணத்தில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.