கனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கினால் தென்னிந்திய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசின் சார்பில் இந்திய விமானப் படையின் உதவி கோரப்பட்டுள்ளது.
கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் குடகு பகுதிகள் கன மழையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவின் குடகு பகுதியில் மழை தொடர்பான பகுதிகளில் உயிரிழப்பு 25 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர, நிலச்சரிவில் பலரும் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று கருதி மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
தாழ்வான பகுதிகளிலும், ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களும் பத்திரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் அணைகள் நிரம்பி, மதகுகள் திறக்கப்பட்டிருப்பதால், கிருஷ்ணா கரையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களும், பெலகாவி மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பெரும்பாலான ஆறுகள் அபாய அளவை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
கபினி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மைசூரு – ஊட்டி இடையேயான நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளது. ஹசன், உத்தர கன்னடா, குடகு, பெலகாவி மாவட்டங்களில் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, கொச்சி விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஓடுபாதையில் வெள்ளம் தேங்கியிருப்பதால் கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 11ம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
நன்றி : வீடியோ : இந்தியன் எக்ஸ்பிரஸ்.