தன்னை முதலவராக்க மறுத்த ஆளுநரை முதல்வரானவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது குறித்து சசிகலா அதிருப்தி அடைந்தார். “முதல்வராக்கிய என்னைவிட ராவ் பெரிய ஆளாயிட்டாரா பழனிக்கு? அந்தாள மொதல்ல போய் பாக்குறாரு? தினகரன் வேற கூட போறான். என்ன நடக்குது?” என்று உருட்டிக் கொண்டிருந்த மெழுகுவரத்தியை வீசி எறிந்து கோபத்தில் கத்தினாராம் சசிகலா. மேலும் அவர் எட்டி உதைத்ததில் சில மெழுகுவர்த்திகள் சேதமடைந்தன. இதற்காக அவரது ₹50/- சம்பளத்தில் கண்க்கிட்டுப் உரிய தொகை பிடித்தம் செய்யப்படும் என்று சிறை அதிகாரி தெரிவித்தார்.
இதில் மேலும் கோபமடைந்த சசிகலா பழனிச்சாமியின் பதவியைப் பறித்து தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார். கைதி அதிகாரிக்கு உத்தரவிட முடியாது என்று சிறை அதிகாரி சொன்னதன் பேரில் அவரிடம் தாக்கீது அனுப்ப கோரிக்கை வைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கட்கிழமை கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் தாக்கீது அனுப்புவது பற்றி முடிவெடுப்போம் என்று சிறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தை நேரம் வேலை நேரத்தில் சேராது என்றும் அதற்கும் கணக்கிட்டு அவரது ₹50/- சம்பளத்தில் உரிய தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் சிறை அதிகாரி சொன்னார். இதைக் கேட்டு கோபத்தில் கண்ணீர் மல்க வெளியே வந்த சசிகலா அங்கிருந்த துவைக்கும் கல் ஒன்றை மூன்று முறைகள் ஓங்கி அடித்தார். அங்கிருந்த பிற கைதிகள் ஏன் கல்லை அடிக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் சபதம் எடுப்பதாக இளவரசி சக கைதிகளிடம் சொன்னார்.
விரைவில் தமிழகத்துக்கு வேறு முதல்வர் வருவாரா அல்லது பழனிச்சாமி பெங்களூரு போய் மன்னிப்புக் கேட்டால் சசிகலா ஏற்பாரா எனபது பெரும் பரபரப்பாக உள்ளது. ஆளுநர் மும்பை பயணம் ரத்தாகுமா எனபது குறித்தும் இன்னும் தகவல் இல்லை.
– சிறப்பு நிருபர்கள், பரப்பன அக்கிரஹார சிறை & சென்னை
குறிப்பு;’ இது நம்ம ஒன்னரை பக்க நாளேடு.
(வலைதளத்தில் வலம்வரும் கற்பனை இதழ்)



