
செய்தியாளர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுவில் இதை ஃபார்வர்ட் செய்திருந்தார்கள். இதை எழுதிய ஊடக நண்பருக்கு எவ்வளவு வலி இருந்திருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
எனக்கும் கூட இப்படி ஐடி கார்ட் எல்லாம் கிடையாது. நானும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட பத்திரிகையாளன் இல்லை. ஆக… ஆக… ஆக… அரசின் சலுகைகள் எதையும் பெற்றிராத… சலுகைகளுக்காக சாய வேண்டிய தேவையில்லாத… ஓர் அப்பாவி அப்பிராணி ஊடகவியலாளனாக இதை ரசித்துப் படித்து… மனவேதனையுடன் பகிர்கிறேன்… இதை ஒன்லைன் ஸ்டோரியாக எழுதிய ஊடகத்தானுக்கு ஒரு சபாஷ்.!
ஐ.டி. கார்டை கேட்ட கொரோனா- அதிர்ச்சியான பத்திரிகையாளர்!
“வணக்கம் நான் கொரோனா வந்திருக்கேன். நீங்க, பத்திரிகையாளரா?”
“என்னது கொரோனாவா? ஒரு நிமிசம் இரு. உன்னை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிறேன்”
“அய்யா, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லை இல்லையா? முதல்ல, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.
நீங்க பத்திரிகையாளாரா எப்படி நம்புறது?”
“ஹேய்… யாரப் பார்த்து இப்படியொரு கேள்விய கேட்குற? எத்தனை வருசமா பத்திரிகையாளரா இருக்கேன் தெரியுமா? நம்பலைன்னா இங்கப்பாரு என் ஐ.டி கார்டை”
கொரோனா இப்போது, பத்திரிகையாளரைப் பார்த்த சந்திரமுகி ஜோதிகாபோல் லக லகவென்று சிரித்துவிட்டு,
“உங்க ஆஃபிஸ் ஐ.டி. கார்டை காட்டச் சொல்லலங்க. அரசாங்கத்தால, அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி. கார்டை காண்பிங்க”
“அது வந்து… ஒரு பத்திரிகைக்கு ஒரு எடிட்டர், ஒரு ரிப்போர்ட்டர், ஒரு ஃபோட்டோகிராஃபருக்குத்தான் தமிழக அரசு ஐடி கார்டு கொடுத்திருக்கு. அதனால…”
“ஓ… அரசாங்கத்தால அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.கார்டு உங்க கிட்ட இல்லையா? அய்யோ பாவம். அப்படின்னா, என்னால ஏற்பட்ட லாக்-டவுனால நீங்க பாதிக்கப் பட்டிருக்க மாட்டீங்க. உங்களுக்கு எதுக்கு 5,000 ரூபாய் நிவாரண நிதி கொடுக்கணும்னு தமிழக முதல்வர் முடிவெடுத்ததுல தப்பே இல்ல.
அதேமாதிரி, அரசாங்கத்தால அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் நான் நோயை பரப்புவேன். அதனாலதான், அவங்களுக்கு மட்டும் தமிழக அரசாங்கமே சிகிச்சை செலவை ஏற்றுக் கொண்டுள்ளது. அதனாலதான், அவங்களோட குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிச்சிருக்காரு தமிழக முதல்வர்.
உங்ககிட்ட அரசாங்கத்தோட ஐ.டி. கார்டு இல்லாததால நீங்க மருத்துவமனை வளாகம், தினமும் டி.எம்.எஸ். வளாகம்னு கூட்டம் கூட்டமாக வந்து பேட்டி எடுத்தாக்கூட தொற்றமாட்டேன். ஏன்… கொரோனா நோயாளியை கட்டிப் புடிச்சு நீங்க பொரண்டாக்கூட உங்களுக்குள்ள நான் வரமாட்டேன். உங்களுக்கு பரிசோதனைகூட பண்ணிப் பார்க்கத் தேவையில்ல. ஏன்னா, உங்கக்கிட்ட அரசாங்கத்தோட ஐ.டி.கார்டு இல்ல. சரி, ப்ளீஸ் ஹெல்ப் மி. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களோட அட்ரஸ் மட்டும் சொல்லுங்க. நான், கிளம்புறேன்”
“ஓ… என் நண்பர்களை அழிக்க என்கிட்டேயே அட்ரஸ் கேட்பியா? இப்போ, நீ பேசினதையெல்லாம் செல்ஃபோன்ல சீக்ரெட்டா வீடியோ ரெக்கார்டு பண்ணிட்டேன். அடுத்த, எக்ஸ்குளுசிவ் நியூஸ் இதுதான்”
“அடப்பாவி இதையுமா நியூஸாக்குவ?”
அதிர்ச்சியாகி தலை தெறித்து ஓடியது கொரோனா.
நீதி: கொரோனா அனைவருக்கும் தொற்றக்கூடிய வியாதி அல்ல. குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.கார்டு இல்லாதவர்களுக்கு கொரோனா தொற்றாது.
இதை, ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த விஞ்ஞானி முதல்வர் ஸ்டாலினிடம் சென்று அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் முகவரிகளை வாங்கிக் கொண்டு கொரோனா தேடி வரலாம். அப்படி, தேடி வரும்போது அங்கீகரிக்கப்பட்ட ஐ.டிகார்டு வைத்திருக்கும் பத்திரிகை நண்பர்கள் அதை கொரோனாவிடம் காண்பிக்காமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.