சென்னையில் சசிகலா வால்போஸ்டரை கிழித்த தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரை பிடித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போலீசில் ஒப்படைத்தார்.
சென்னை அடையாரில் கீரின்வேஸ் சாலையில் முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் கடம்பூர் ராஜூ உட்பட அமைச்சர்கள் வீடுகள், உயர் அதிகாரிகளின் வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் அதிமுக பொதுச்செலாளர் சசிகலாவை வாழ்த்தி ஏராளமான வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த வால்போஸ்டர்களை இன்றுகாலை மர்ம நபா் ஒருவர் கிழித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை கவனித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மர்மநபரை பிடித்து அபிராமபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் பாண்டியன்(55) என்றும், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், உத்தமபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் என்பதும், சொக்கலிங்காபுரம் தற்போதைய கிளைச்செயலாளர் என்றும் தெரியவந்துள்ளது.
சசிகலா வால்போஸ்டரை கிழித்த அதிமுக பிரமுகரை, அமைச்சர் போலீசில் பிடித்து ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



