spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்சசிகலா குழு நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்: ராமதாஸ்

சசிகலா குழு நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்: ராமதாஸ்

சென்னை:
ஜெயலலிதா மர்ம மரணத்தில், சசிகலா குழு மேற்கொண்டு வரும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மற்றும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் விளக்கமளிப்பதற்காக தேர்வு செய்த காலக்கட்டத்தை வைத்துப் பார்க்கும்போது நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனாலும், உண்மையற்ற இந்த நாடகம் மக்கள் முன் எடுபடாமல் அம்பலமாகிவிட்டது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22&ஆம் தேதி  சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே அவரது உடல்நிலை குறித்து ஐயம் எழுந்தது. மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படாத போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஐயம் எழுந்தது. ஜெயலலிதா மர்மமான முறையில் உயிரிழந்தபோது அவரது இறப்பு குறித்தும் ஐயங்கள் எழுந்தன. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அப்போதெல்லாம் ஐயங்களுக்கு விளக்கமளிக்காத தமிழக அரசு, இப்போது புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவசர, அவசரமாக மருத்துவர் ரிச்சர்ட் பேலை அழைத்து வந்து விளக்கமளிக்க வைத்ததில் இருந்தே அதன் நோக்கத்தையும், பின்னணியில் இருப்பவர்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.
வழக்கமாக முதலமைச்சர் ஒருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவரது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அல்லது சுகாதாரத்துறை செயலர் தான் விளக்கமளிக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாதது ஏன்? என்று பலமுறை வினா எழுப்பியிருந்தேன். ஆனால் அப்போதெல்லாம் அதை கண்டுகொள்ளாமல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மூலமாகவே அனைத்து விவரங்களையும் வெளியிட்ட தமிழக அரசு, இப்போது லண்டன் மருத்துவரை அழைத்து வந்து அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்குவதற்கு முயல்வது ஏன்?
சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இவ்வளவு தாமதமாக விளக்கம் அளிப்பது ஏன்? என்று ஒரு செய்தியாளர் கேட்ட போது, ‘‘நாங்கள் பலவாரங்களுக்கு முன்பே பேலை அழைத்தோம். அவரால் இப்போது தான் வரமுடிந்தது’’ என்று அரசு மருத்துவர் கூறியதும், அப்போது குறுக்கிட்ட பேல்,‘‘இல்லையில்லை… எப்போது அழைத்திருந்தாலும் நான் வந்திருப்பேன். அவர்கள் இப்போது தான் அழைத்தார்கள்’’ என்று அவசரமாக மறுத்ததும்  இந்த நாடகத்தின் திரைக்கதையில் உள்ள ஓட்டைகள்.
அதிலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் குறித்து மட்டுமே பேச வேண்டிய லண்டன் மருத்துவர் பேல், அதைத் தாண்டி,‘‘ ஜெயலலிதா மரணத்தில் எந்த சதித்திட்டமும் இல்லை. அவருக்கு விஷம் எதுவும் தரப்படவில்லை. உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை. சசிகலாவுடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். அவர் தான் ஜெயலலிதாவை மிக நன்றாக கவனித்துக் கொண்டார்’’ என்றெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதைப் பார்க்கும் போது இந்நாடகத்தை இயக்குவது அப்பல்லோவில் அமர்ந்திருக்கும் தில்லை நடன அரசர் தான் என்பதை உணர முடிகிறது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் அளித்த விளக்கங்கள் பற்றி சில ஐயங்களை நேற்று எழுப்பியிருந்தேன். இன்று இன்னும் கூடுதலாக ஐயங்கள் எழுந்திருக்கின்றன. ஜெயலலிதாவால் ஒரு கட்டம் வரை பேச முடியவிலை. அதன்பின் அவர் பேசியது தெளிவாக இல்லை என்று கூறிய ரிச்சர்ட் பேல்,‘‘ ஜெயலலிதாவும் நானும் பல விஷயங்களை பேசியிருக்கிறோம். டிவியில் பார்த்த நிகழ்ச்சிகள், சினிமாக்கள் பற்றி பேசினோம். உணவு வகைகள் குறித்தும் பேசினோம். எனது குழந்தைகள் பற்றி நான் பேசினேன். அவர் எனது குடும்பத்தைப் பற்றிக் கேட்டார். என்னை ‘பாஸ்’ என்று தான் ஜெயலலிதா அழைப்பார்’’ என்றெல்லாம் கூறியது ஒரு ஃபேண்டசி திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது. உலகப் புகழ் பெற்ற மருத்துவரான ரிச்சர்ட் பேல் அவரது  புகழ், பெருமை, நம்பகத்தன்மை ஆகியவற்றை அடகு வைத்து இந்த நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது  ஏன்? எனத் தெரியவில்லை.
அப்பல்லோ மருத்துவர் பாபு ஆப்ரஹாம் பேசும் போது,‘‘டாக்டர்கள் தவிர ஜெயலலிதாவுடன் அவரின் குடும்பத்தினர் இருந்தனர். அவர்களுடன் தினமும் ஜெயலலிதா உரையாடி வந்தார். சசிகலா மட்டும்தான் ஜெயலலிதாவுடன் இருந்து வந்தார் என்பது உண்மையல்ல. அவருடன் பேசிய அனைவரையும் எனக்கு தெரியாது. ஜெயலலிதாவிடம் கேட்டுவிட்டுத்தான், அவர் சரி என்றால் அவர்களை அனுமதிப்போம்’’ என்று கூறியிருக்கிறார். அவர் கூறுவது உண்மையென்றால் குறைந்தது 3 முதல் 5 பேராவது ஜெயலலிதா அறையில் இருந்திருக்க வேண்டும். இது உண்மை என்றால், சசிகலா குடும்பத்தினரை அனுமதித்த மருத்துவர்கள் மத்திய அமைச்சர்களையும், மாநில ஆளுனர்கள் மற்றும் முதலமைச்சர்களையும், அரசியல் தலைவர்களையும் அனுமதிக்க மறுத்தது ஏன்? சசிகலா உறவினர்களிடமிருந்து நோய் தொற்றாத நிலையில், மற்ற தலைவர்களிடமிருந்து மட்டும் எப்படி தொற்றும்? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா மீதும், அவரது அணுகுமுறை மீதும் எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால், அதையும் தாண்டி மக்களின் ஆதரவு பெற்ற தலைவரின் கடைசிக் காலம் இப்படி அமைந்திருக்கக் கூடாது என்ற வருத்தம் எனக்கு உள்ளது. இதற்குக் காரணமானவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள நடத்தப்படும் நாடகங்களையும் நம்பமாட்டார்கள்.
– என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe