சென்னை:
தமிழகத்தின் தனியார் பால் நிறுவனம் மறைமுகமாக விலை ஏற்றியுள்ளதாகவும், தமிழக அரசு இதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனரும் மாநிலத்தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
அண்டை மாநிலமான ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனங்களில் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹெரிடேஜ் நிறுவனம் கடந்த 01.02.2017 முதல் தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை உயர்த்துவதாக தன்னிச்சையான முடிவெடுத்து சுற்றறிக்கை வாயிலாக பால் முகவர்களுக்கு தெரிவித்தது.
இந்த தன்னிச்சையான பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, அந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்ததோடு நிற்காமல் ஹெரிடேஜ் நிறுவனம் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் தனிப்பிரிவிலும், பால் வளத்துறை அமைச்சர் மற்றும் பால் வளத்துறை செயலாளர் ஆகியோரது அலுவலகத்திலும் மனு அளித்து வந்தோம்.
அதனைத் தொடர்ந்து ஹெரிடேஜ் நிறுவனம் அன்றைய தினமே தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலை உயர்வு அறிவிப்பினை திரும்ப பெற்றுக் கொண்டது.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் (05.02.2017) முதல் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி 200கிராம் தயிர் பாக்கெட்டில் 25கிராம் அளவை குறைத்து 175கிராமாக மாற்றியுள்ளது. பாக்கெட்டில் தயிரின் அளவினை குறைத்த அந்நிறுவனம் விற்பனை விலையை குறைக்கவில்லை. அந்த வகையில் ஹெரிடேஜ் நிறுவனம் தயிருக்கான விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு 6.00ரூபாய் மறைமுகமாக உயர்த்தி பொதுமக்கள் தலையில் பெரும் பாரத்தை சுமத்தியுள்ளது.
பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை நேரடியாக உயர்த்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் ஹெரிடேஜ் நிறுவனம் தற்போது இந்த மறைமுக விலை உயர்வை மக்கள் மீது திணித்துள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு தயிர் பாக்கெட்டின் அளவினை வழக்கமான அளவிலேயே விநியோகம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் ஹெரிடேஜ் நிறுவனத்தின் மறைமுக தயிர் விற்பனை விலை உயர்வை தொடர்ந்து தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் பால் முகவர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, சுற்றறிக்கையும் வழங்காமல் தங்களின் தயிருக்கான விற்பனை விலையை இன்று (07.02.2017) முதல் லிட்டருக்கு 4.00ரூபாய் (ஒரு லிட்டர் 52.00ரூபாயில் இருந்து 56.00ரூபாயாக உயர்வு) தன்னிச்சையாக உயர்த்தியுள்ளது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தயிருக்கான விற்பனை விலையை உயர்த்திய ஹட்சன் நிறுவனத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு இந்த தன்னிச்சையான விலை உயர்வை ஹட்சன் நிறுவனம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அந்நிறுவனத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
தற்போது தமிழக அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாத இந்த நேரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பால் வளத்துறை செயலாளர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையான முறையில் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை மறைமுகமாக உயர்த்த தொடங்கி பொதுமக்கள் மீது பாரத்தை சுமத்தத் தொடங்கி விடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



