October 16, 2021, 7:24 am
More

  ARTICLE - SECTIONS

  இவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்!

  கீழக்கரை ரத்தினம் என்று வர்ணிக்கப்படும் நமது சென்னை மாநகரம் உப்பிக் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் ஆமையைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.!

  mylapore theppakulam - 1

  இவ்வளவு மழை கொட்டியும் அபாய கட்டத்தில் உள்ள சென்னை மாநகரின் நிலத்தடி நீர்.! வரண்டு கிடக்கும் மயிலாப்பூர் கோயில் குளங்கள்!

  சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சராசரியை விட இந்த ஆண்டு (2019)மழைப் பொழிவு அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  சென்னை மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஆகிய நான்கிலும் ஏறத்தாழ பாதி அளவு நீர் நிரம்பி இருக்கின்றன.( இந்த நான்கு ஏரிகளிலும் சேர்த்து, மொத்த கொள் அளவு 11TMC. தற்போது உள்ள நீரின் அளவு 6 TMC).

  சென்னை மாநகருக்கு ஒரு மாதத்திற்கு சுமார் ஒரு டிஎம்சி தண்ணீர் தேவை. இந்த ஏரிகள் நான்கும் முழுமையாக நிரம்பினால் தான் அடுத்த பருவ மழை வரும் வரை சமாளிக்க முடியும்.

  இந்த நான்கு ஏரிகள் தவிர வீராணம் நிரம்பியிருக்கும் போது அங்கிருந்து குழாய் மூலம் வரும் ஓரளவு நீரும், கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் நீரும் , கிருஷ்ணா கால்வாயில் இருந்து வரும் தண்ணீரும் சென்னை மக்களின் தாகத்தை ஓரளவு தீர்த்துக் கொண்டிருக்கின்றன.

  பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தங்கள் வணிக வளர்ச்சிக்காக சென்னையைத் தேர்வு செய்தபோது இங்கு சில ஆயிரம் மக்களே பரவலாக வசித்துக் கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் வளம் இங்கு அபரிமிதமாக இருந்தது. சுற்று வட்டாரத்தில் இருந்த ஏராளமான நீர்நிலைகள், அவற்றிலிருந்து வெளியேறிய தெள்ளிய நன்னீரை அடையாறும் கூவமும்
  சுமந்து கொண்டிருந்தன.

  இந்த இரண்டு ஆறுகளிலும் ஆங்கிலேயர்கள் நினைத்த போதெல்லாம் குளித்து மகிழ்ந்தனர். சென்னையை அவர்கள் தேர்வு செய்ததற்கு இங்கிருந்த நீர்வளமும் முக்கியக் காரணம்.

  சில ஆயிரங்கள் ஆக இருந்த மக்கள் தொகை சில லட்சம் ஆனபோதும் சென்னை மாநகரம் போதுமான நீராதாரம் கொண்ட செழிப்பான பகுதியாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது மக்கள் தொகை ஒரு கோடியை கடந்து விட்டது. 2013ம் ஆண்டில் மக்கள் தொகை 73 லட்சம். கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 27 லட்சம் அதிகரித்துள்ளது.

  நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருமழையும் நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை பொய்த்துப் போதுமான புவியியல் அமைப்பைக் கொண்ட சென்னை மாநகரைச் சுற்றிலும் இருந்த நீர் நிலைகள் பல காணாமல் போய்விட்டன. பெய்யும் சராசரி மழையளவிலும் மாற்றம் இல்லை. ஆனால் மக்கள் தொகை சில ஆயிரத்திலிருந்து 100 லட்சத்தை கடந்துவிட்டது. இதுதான் மையப் பிரச்சினை.

  இந்தப் புரிதலுடன் சென்னை மாநகரைக் காப்பாற்ற ஆட்சியாளர்கள் செயல்பட்டிருக்க வேண்டும். சென்னை மாநகருக்குள் மக்கள் குவிவதை தடுத்து, நீராதாரங்கள் உள்ள புதிய துணை நகரங்களை சென்னையை சுற்றி உருவாக்கி யிருக்க வேண்டும். கூடுதலாக நீரை சேமிக்கும் வகையில் புதிய ஏரிகளை உருவாக்கியிருக்க வேண்டும்.

  திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தேர்வாய் கண்டிகை பெரிய ஏரியையும் அருகிலுள்ள கண்ணன் கோட்டை ராஜன் ஏரியையும் இணைத்து சென்னை மாநகர் குடிநீர் தேவைக்கு கூடுதலாக ஒரு ஏரியை உருவாக்கும் திட்டத்தை 2013ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அது பயன்பாட்டுக்கு வந்தால் ஒன்றரை டிஎம்சி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். ஆண்டுகள் ஆறு கடந்தும் அந்த திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

  இந்த சூழ்நிலையில் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத வகையில், சென்னை மாநகரின் நிலத்தடி நீர் கடந்த ஆண்டு ‘கிடுகிடு’வென கீழே இறங்கியது. 100 அடிக்கு கீழே குழாய் இறக்கியதும் பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்காத நிலைமை இருந்தது.

  சில தினங்களாக பருவ மழை கொட்டி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் சென்னை மாநகரின் நிலத்தடி நீர் மட்டம் திருப்திகரமான நிலையை எட்டவில்லை.

  சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளத்தைக் கொண்டு சென்னை மாநகரில் உள்ள கோயில் குளங்களை யாவது நிறைத்திருக்கலாம்.

  சென்னை மாநகரின் நிலத்தடி நீர் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு மயிலாப்பூரில் உள்ள கோயில் குளங்கள் ஒரு சிறந்த சான்று. இங்கு உள்ள கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் மட்டும் 2 அடி தண்ணீர் உள்ளது.

  Natraj ips mylapore mla - 2

  மயிலாப்பூர் நிலத்தடிக்கு வளம் சேர்க்கும் மற்ற மூன்று குளங்களான சித்திரைக் குளம், மாதவப்பெருமாள் கோயில் குளம், விருபாக்சீஸ்வரர் கோவில் குளம் ஆகியவை வறண்டு கிடக்கின்றன. தரையிலிருந்து இக்கோவில் குளங்களின் தரைப்பகுதி சுமார் 50 அடி ஆழமாகும்.மழைக்காலத்தில் சாலைகளில் பெருக்கெடுத்து வீணாகும் தண்ணீரைக் கொண்டு இக்குளங்களை நிரப்பும் முயற்சியில் சட்ட மன்ற உறுப்பினர் ஆர். நடராஜ் ஈடுபட்டார். அவருக்கு அதிகாரிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளித்தார்கள் என்று தெரியவில்லை.

  பருவமழை பெய்து கொண்டிருக்கும் இப்பவே இந்த நிலை என்றால், அடுத்த பருவமழை வரை நிலத்தடி நீரின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை சொல்லத்தேவை இல்லை…

  … கீழக்கரை ரத்தினம் என்று வர்ணிக்கப்படும் நமது சென்னை மாநகரம் உப்பிக் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் ஆமையைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.!

  • ம. வி. ராஜதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,142FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,560FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-