தமிழக வனப்பகுதிகளுக்குள் புகைப்பிடித்தாலோ அல்லது சமையல் செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நிலவும் கடும் வறட்சியால் மரங்கள், செடிகள் மற்றும் கொடிகள் காய்ந்து சருகாகி உள்ளன. இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக-கர்நாடக எல்லையான பேடுகுழி கர்நாடக வனத்தில் தீப்பிடித்து 300 ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாயின.
மூங்கில் உராய்வு காரணமாகவே வனத்தில் தீப்பிடித்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழக பகுதியான கேர்மாளம், காராப்பள்ளம், ஹாசனூர்,கோட்டாடை ஆகிய பகுதிகளில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வனத்தில் ஏற்படும் காட்டுத்தீ குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.


