2012ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புறநகர்ப் பகுதியில் பங்களா ஒன்றை எடுத்துத் தனியே தங்கியிருந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்த இந்தப் பெண்ணைப் பற்றி பீலா பிரியா என்ற தலைப்பிட்ட கட்டுரை மூலம் முதன் முதலில் வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி தோலுரித்துக் காட்டியது குமுதம் ரிப்போர்ட்டர் இதழ்தான். முதலில் அவரை நெருங்கவே தயக்கம் காட்டிய கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் பின்னர் சுதாரித்துக் கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக அவர்மீது வழக்குகளைப் பதிந்து அவரைச் சிறைக்கு அனுப்பி வைத்தது.
கிருஷ்ணகிரி சத்யசாய் நகர் கடைக்கோடியில் ஒதுக்குப்புறமான பங்களா வீடு ஒன்றில் வசித்து வந்த இவர் ஒரு வி.வி.ஐ.பி.க்குரிய அந்தஸ்துடனேயே வாழ்ந்திருக்கிறார். பிரியாவைச் சந்திக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே அப்பாயிண்மெண்ட் வாங்கியிருந்தால் மட்டுமே அது சாத்தியம். முதல்வர் ஜெவின் மகள் நான் என்று கதையளந்த இவரது வார்தைகளை நம்பி சிபாரிசுகளுக்காக இவரது வீட்டிற்கு இரசியமாக வந்து சென்ற வி.ஐ.பி.க்கள் ஏராளம்.
பிரியா விட்ட கதையயை உண்மையென நம்பிய இளைஞர்கள் மூவரும் தர்மபுரி மாவட்டம் ஜிட்டண்ணஅள்ளி பஞ்சாயத்துத் தலைவரும் பெருஞ்செல்வந்தருமான கோவிந்தன் என்ற அதிமுககாரரை சந்தித்து பிரியா தங்களிடத்தில் சொன்ன கதையை அவரிடத்தும் சொல்லி ஒரு மாதத்துக்குள் திரும்பத் தருவதாகக் கூறி பிரியாவுக்காக 5கோடி ரூபாயைக் கேட்டு நெருக்குதல் தந்துள்ளனர்…. ஆனால், இதனை நம்பாத அ.தி.மு.க.காரரான கோவிந்தன் மகேந்திரமங்கலம் காவல்நிலையத்தில் 24.11.2011 தேதியில் பிரியா மீது ஒரு புகார் தந்தார். கோவிந்தன் தந்த அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் மிகவும் யோசித்துத் தடுமாறியது. பின்னர் அவரிடம் பணம் கேட்டு வந்த இளைஞர்களை மட்டும் வருமானவரி அதிகாரிகளாக நடித்துப் பணம் கேட்டதாக வழக்கொன்றைப் போட்டு சிறைக்கனுப்பியது.
அதிமுக வி.ஐ.பிக்கள், ஆன்மீகப் புள்ளிகள், பெரும் செல்வந்தர்கள் பலரிடமும் ஜெயலலிதாவின் மகளாகத் தன்னைச் சொல்லிக் ஏமாற்று வேலைகளை ஒரு பெண் செய்து வருவது மேலிடத்தின் கவனத்தை எட்ட உடனடியாக அந்தப் பெண்ணைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னரே களமிறங்கிய போலீஸ் பிரியாவைக் கைது செய்திருக்கின்றனர். தன்னைக் கைது செய்ய வந்த போலீசிடமும் பிரியா தான் முதல்வரின் மகள்தான் என்று அசராமல் கூறியிருக்கிறார்.
முதலில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரால் விசாரிக்கப்பட்ட பிரியா மீதான மோசடி வழக்கு பிறகு சிபிசிஐடியினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. நாமக்கல்லைச் சேர்ந்த மேகநாதன் தன்னுடைய மகனை மருத்துவக் கல்லூரியில் தனது செல்வாக்கைக் கொண்டு சேர்த்து விடுவதாகக் கூறி 30 இலட்ச ரூபாயினை பிரியா மோசடி செய்துவிட்டதாகத் தந்த புகாரினையடுத்து ஏற்கனவே மோசடி வழக்கில் கைதாகி சேலம் பெண்கள் கிளைச் சிறைச்சாலையில் காவலில் இருந்த பிரியாவை சிபிசிஐடியினர் மீண்டும் கைது செய்தனர்.



