
நிச்சயித்த மாப்பிள்ளையை உதறிவிட்டு சப்–இன்ஸ்பெக்டர் மகள் காதலனை மணந்தார் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம்
நிச்சயித்த மாப்பிள்ளையை கை விட்டு விட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரின் மகள் காதலனை மணந்தார். கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தபோது, தனது தந்தையிடம் நகைகளை கழற்றிக் கொடுத்து விட்டு, கண்ணீருடன் விடை பெற்றார்.
பிரமிளா–யாசர் அராபத்
சென்னை பம்மலைச் சேர்ந்தவர் பிரமிளா (வயது 33). இவரது தந்தை கணேசன் சென்னையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். பட்டப்படிப்பு படித்துள்ள பிரமிளாவுக்கு, கடந்த வாரம் சென்னை புரசைவாக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளை காஷ்மீரில் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். திருமணத்தை 2 மாதங்கள் கழித்து, நடத்த முடிவு செய்தனர். இதனால் மாப்பிள்ளை, நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் காஷ்மீர் புறப்பட்டு சென்றார். பிரமிளா, சென்டிரல் ரெயில் நிலையம் சென்று அவரை வழி அனுப்பி விட்டு வந்தார்.
மாப்பிள்ளையை வழி அனுப்பி வைத்த பிரமிளா, வீட்டை விட்டு வெளியேறி தனது காதலன் யாசர் அராபத்தை பதிவு திருமணம் செய்து கொண்டார். பிரமிளாவின் இந்த அதிரடியான நடவடிக்கையால் அவரது தந்தை சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்லாவரம் போலீசில் புகார் கொடுத்தனர்.
கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம்
பிரமிளா, தனது காதல் கணவர் யாசர் அராபத்துடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். இந்த தகவல் தெரிந்து, பிரமிளாவின் தந்தை, தாயார், சகோதரன், உறவினர்கள் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் கமிஷனர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.
பிரமிளாவின் தாயார், அவரை பார்த்தவுடன், கமிஷனர் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து விட்டார். அவரை மயக்கம் தெளிய வைத்து அழைத்துச் சென்றனர். சகோதரன், பிரமிளாவின் காலில் விழுந்து கெஞ்சினார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, இப்படி நடந்து கொண்டாயே, தயவு செய்து, எங்களுடன் வந்து, அப்பாவின் மானத்தை காப்பாற்று, என்று கண்ணீர் விட்டு அழுதார். பிரமிளா, பதில் ஏதும் சொல்லாமல், காதல் கணவர் யாசர்அராபத்தின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு கல்லாக நின்றார்.
நகைகளை கழற்றி கொடுத்தார்……
எங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டாயே, நான் வாங்கி கொடுத்த நகைகளை மட்டும் அணிந்திருக்கிறாயே, என்று சப்–இன்ஸ்பெக்டர் கேட்க, பிரமிளா அடுத்த கணமே, காதில் போட்டிருந்த கம்மல், கைகளில் போட்டிருந்த வளையல், கழுத்தில் போட்டிருந்த சங்கிலி என்று சுமார் 10 சவரன் நகைகளை கழற்றி தந்தையிடம் கொடுத்தார். நிச்சயதார்த்தம் வரை வந்து விட்டு, என்னை அவமானப்படுத்தி விட்டாயே, நீ நன்றாக வாழு, என்று ஆசி வழங்கி விட்டு, கணேசன் போய் விட்டார்.
தந்தை–மகளின் இந்த பாச போராட்டத்தை, கமிஷனர் அலுவலக போலீசார் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இது பார்ப்பவர்களை கலங்க வைக்கும் வகையில் இருந்தது.



