கடந்த ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 5, 2017 அன்று, சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் கண்ணகி தெருவின் இல்லமொன்றில் எளிய நிகழ்வு ஒன்று நடைபெற்றது. 90 வயதை எட்டிய அந்த மனிதரது அன்பில் திளைக்கவும், வாழ்த்தவும், அவரிடத்தில் ஆசி பெற்றுச் செல்லவும் குழுமி இருந்த நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களால் நிறைந்திருந்தது அவை. அந்நாளைய வடாற்காடு மாவட்டத்தின் சிற்றூரான சொரையூரில் பிறந்து வளர்ந்து உயர்நிலைக் கல்வி மட்டிலும் முடித்து வருவாய்த் துறையில் பணிக்குச் சேர்ந்து தமது கடுமையான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து டெபுடி கலெக்டர் பொறுப்பில் பணி ஓய்வு பெற்ற எங்கள் தந்தை எஸ் ஆர் வரதாச்சாரி அவர்கள்தான் இந்த பெருமைக்குரியவர்.
இந்த உற்சாகமான பொழுதில் ஒரு கட்டுரைத் தொகுப்பைக் கொண்டு வரலாம் என்ற பேரார்வத்தில் மிகக் குறுகிய நேரத்தில் இறங்கிய முயற்சிக்கு நூல் வடிவம் அளித்ததில் பாரதி புத்தகாலய மேலாளர் தோழர் நாகராஜன் அவர்களது ஊக்கமிக்க ஒத்துழைப்பு மிகுந்த பாராட்டுக்குரியது. அவருக்கு நன்றி உரித்தாகிறது.
தந்தையைக் குறித்த கட்டுரை உள்ளிட்டு ஆங்கில இந்து, தமிழ் இந்து, நவீன விருட்சம் மற்றும் தீக்கதிர்-வண்ணக்கதிர் பத்திரிகைகளில் பல்வேறு தருணங்களில் வந்திருந்த படைப்புகளின் தொகுப்பான எஸ் ஆர் வி 90 என்ற இந்த நூலின் பிரதியை, தம்மை வாழ்த்தித் தம்மிடம் ஆசி பெறவந்த அன்பர்கள் அனைவருக்கும் எஸ் ஆர் வி வழங்கி மகிழ்ந்தார்.
தொகுப்பின் முகப்புக் கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது. உங்கள் வாசிப்புக்கும், பகிர்வுக்கும்.
அன்புடன்
எஸ் வி வேணுகோபாலன்
***
செம்மாந்த வாழ்க்கையின் கம்பீரத்திற்கு வயது 90
சொரையூர் ரங்காச்சாரி வரதன் என்பது ஒரு வேளை பாஸ்போர்ட் எடுத்திருந்தால் அதில் பதிவாகி இருக்கக் கூடிய முழு பெயர். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு ஊர்களில் அரசு உத்தியோகம் பார்த்த இடங்களில் எல்லாம் எஸ் ஆர் வரதாச்சாரி என்பதே யாவரும் அறிந்த பெயர். (அந்நாளைய) வடாற்காடு மாவட்டத்தில் மாம்பாக்கம் – வாழைப்பந்தல் சாலையில் குறுக்கே பாறைமோடு வழியே கிளைப்பாதையில் பெரிய ஏரிக்கரையைக் கடந்ததும் தட்டுப்படும் சிற்றூரான சொரையூரில் வரதன் என்பதாகவே வழங்கப்பட்ட பெயர் என்றாலும், மின்னும் கறுத்த நிறத்தின் காரணமாக ஊரில் நிலைத்த பெயர் கப்புக்குட்டி (கறுப்புக்குட்டி!). அரசு வாகனத்தோடே பார்த்துப் பழக்கப்பட்ட குழந்தைகள் அவரை அன்போடு அழைத்த பெயர் ஜீப் தாத்தா.
வருவாய்த்துறையின் மிக சாதாரண படிக்கட்டில் கால் வைக்கும்போதே, மேலதிகாரியின் பணி நிலைமைகள், அதிகார வரம்பு பற்றி வளர்த்துக் கொண்டிருந்த ஞானம் அபாரமானது (ஒரு முறை, தவறிழைத்த மனிதருக்கு அபராதம் விதித்த தனது உயரதிகாரி மாஜிஸ்திரேட்டை அவரது அறைக்குள் அழைத்துவந்து அவரது வரம்புக்கு அதிகமான தொகையைத் தண்டனையாக வழங்கினால் செல்லாது என்று விதிகளை நினைவூட்டி அதைக் குறைக்க வைத்த துணிவை எப்படிப் புகழ்வது!). பின்னர் படிப்படியாக தாலுகா உணவு வழங்கும் அதிகாரியாக, தாசில்தாராக, மாவட்ட உணவு வழங்கும் பொறுப்பாளராக, டெபுடி கலெக்டராக உயர்ந்த அவரது உழைப்பின் வலுவும், அயராத செயல்பாடுகளும், அசாத்திய உளத்திண்மையும், நேர்மையின் ஒளிவீச்சும், யாருக்கும் அஞ்சாத நெறிமிக்க வாழ்க்கைத் தடங்களும் அவரது கம்பீரத்தை மேலும் உயர்த்தின.
கல்லூரிக் கல்வி பெறாத எளிய குடும்பச் சூழலிலிருந்து தம்மை தமிழிலும், ஆங்கிலத்திலும் இலக்கிய-இலக்கண நயமும் தூய்மையும் பெருமையும் துலங்கும் வண்ணம் பேசவும் எழுதவும் அவர் வளர்த்தெடுத்துக் கொண்ட விதம் வியப்புக்குரியது. அலுவலக கோப்புகளில் சரிவர விவரங்களைக் குறித்து அனுப்பாத பணியாளர்களது பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருப்பி அனுப்பும் கோபமிக்க தருணங்களில்கூடக் கவிதைத் தமிழ் தெறிக்கும். ஆனால் ஏழை எளிய மக்கள்பால் அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் விஷயங்களில் அக்கறையும், கரிசனமும், பொறுப்புணர்வும் மேலோங்கி நிற்கும். உயர்குடியில் பிறந்தவரை எப்படி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் அரிசன நலத்துறை உயரதிகாரியாக நியமிக்கலாம் என சிலர் முரசொலித்துக் கேட்டபோது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தகைசான்ற தமது பண்பாக்கத்தால் அஞ்சாது தமது கடமைகளைச் செம்மாந்த முறையில் நிறைவு செய்தவர் அவர்.
எத்தனை கெடுபிடிகள், வேலையில் சமரசமற்ற தீவிரம், அயராத உழைப்பு இருந்தாலும், குணமென்னும் குன்றேறி நிற்பதால், கணமேயும் தங்கி இராத கோபமும், எப்போதும் இயல்பாகப் பெருகும் நகைச்சுவை உணர்வும், வாய்விட்டுச் சிரிக்கும் அன்புள்ளமும், எளியவர்க்கு உதவும் நல்லெண்ணமும், கொடைத்தன்மையும் யாவரையும் கவர்ந்திழுக்கும் காந்த மனிதராக்கி இருக்கிறது.
1948ல் கே சி ராஜகோபாலாச்சாரி – ராஜலட்சுமி இணையரின் மூத்த புதல்வி சுகந்தாவின் கரம் பற்றிய இல்லற வாழ்வில் கீதா, ரங்கராஜன் (ரவி), வேணுகோபாலன் (ரமேஷ்) மூன்று மக்கட்பேறு வாய்த்தபின் காலம் பறித்துக் கொண்டது அந்தக் காதல் மனையாளை. பெரியப்பா மகனும், ஆதர்ச வழிகாட்டியான எஸ் வி சந்தானம் அவர்களது அன்பு முயற்சியால், 1966ல் பண்ருட்டியை அடுத்த கோட்லாம்பாக்கம் எனும் சிற்றூரின் வைதீகர் குப்புஸ்வாமி – குப்பம்மாள் இணையரின் செல்ல மகள் மைதிலியை மனைவியாக ஏற்கவும், சிற்றன்னையோ மாற்றன்னையோ என்றல்லாது சொந்தத் தாயாகக் குழந்தைகளை வரித்துக் கொண்ட அவருடன் இயைந்த குடும்ப வாழ்வில் வீரராகவன், ஆண்டாள், தேசிகன், சுதா லட்சுமி என்ற செல்வங்கள் வாய்த்தனர். ஒரு குக்கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்து சவால்மிக்க நகர, மாநகரச் சூழலில் ஈடுகொடுத்து நின்று இந்த ஐம்பதாண்டு இல்லறத்தில் அரசுப்பணி நிறைவிற்குப்பின் சளைக்காத வகையில் உறவினர்-நண்பர்கள் குடும்ப நிகழ்வுகள், சொந்தவூர் கோயில் சிறப்பு ஆராதனைகள் என ஓரிடம் விடாது சென்று வரத்தக்க உற்சாகமிக்க உடல் நலத்தோடும், உளநலத்தோடும் அவரைப் பேணிக் காத்துப் பெருமிதம் பொங்க வைத்தவர் மைதிலி.
தமது எண்பதாம் வயதின் நிறைவு விழாவும், மூத்த மகன் ரங்கராஜன் அறுபதாண்டு நிறைவு நிகழ்ச்சியும் பரவசத்தோடு நடத்தி இன்று தொண்ணூறு வயது நிறைவில், மாப்பிள்ளைகள் ரங்கநாதன், சுந்தர், கிருஷ்ணகுமார் மருமகள்கள் ஜெயந்தி, ராஜேஸ்வரி, லட்சுமி, சுபஸ்ரீ – பேத்திகள் அபிநயா, இந்து, சுதந்திரா, பிரியங்கா, அவந்திகா -பேரன்கள் ராஜேஷ், அரவிந்த், நந்தா, நாராயணன், கீர்த்திவாசன் மற்றும் நெருங்கிய சுற்றமும் நட்பும் குதூகல கொண்டாட்ட சங்கமத்தில் நிறைந்துள்ள அவையில் எல்லோரையும் ஆசீர்வதிக்கும் வண்ணம் நடுநாயகமாக நிற்கும் எங்கள் அன்பின் ஊற்றுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்……



