தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நிகழ்வில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மூன்று அமைச்சர்கள் வராதது கண்டு அதிமுக எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் சபையின் உள்ளே தங்களுக்குள் முனுமுனுத்துக்கொண்டார்கள்.
இதுகுறித்து விசாரித்தபோது, தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க தம்பிதுரையுடன் மூன்று அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். சசிகலாவின் தற்காலிய பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்குமாறும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்த இவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்த அதிமுக்கிய விஷயத்திற்காக டெல்லி செல்லும் நோக்கத்தில் இன்றைய பட்ஜெட்டை புறக்கணித்திருக்கிறார்கள் அமைச்சர்கள்.
இதுகுறித்து ஆளும்கட்சி எம்எல்ஏக்களிடம் நாம் பேசியபோது, ''நிதிநிலை அறிக்கை என்பது ஒவ்வொரு துறை சார்ந்தும் முக்கியமானது. அதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது துறை சார்ந்து என்ன அறிவிப்புகள் வெளியாகிறது என்பதை கவனிப்பது அவசியம். அதனால் பட்ஜெட் தாக்கலின்போது எந்த அமைச்சரும் கலந்து கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். தவிர, பட்ஜெட்டை அமைச்சர்களே புறக்கணிப்பது அவர்களது ஆட்சியையே புறக்கணிப்பதற்கு சமம். அமைச்சர்களுக்கு ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கையில்லை, நிதிநிலை அறிக்கை மீதும் நம்பிக்கையில்லை என தெரிவித்தனர்.



