
சென்னை:
சென்னை, புராதனமான நகரம். சிறு சிறு கிராமங்களின் தொகுப்புதான் இன்றைய சென்னை. சென்னையின் மிகப் பழைமையான விழாவாக மயிலாப்பூர் பங்குனித் திருவிழாவைச் சொல்வார்கள். கயிலையே மயிலை, மயிலையே கயிலை என்பது இத்தலத்தின் சிறப்பு.
மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழா ஏப்ரல் 1ம் தேதி துவங்கி, ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆலயத்தின் கிராம தேவதையான கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாட்டுடன் துவங்கிய இவ்விழாவின் கொடியேற்றம் ஏப்.2ம் தேதி நடைபெறுகிறது. அதிகார நந்தி காட்சியைத் தொடர்ந்து ஏப்ரல் 5ம் தேதி வெள்ளி புரூஷா மிருக வாகனம், சிங்கம் புலி வாகனங்களில் பெருமான் வீதியுலா, மறுநாள் வெள்விடை பெருவிழாக்காட்சி, 7ம் தேதி ஐந்திருமேனிகள் யானை வாகனங்கள் உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் ஏப்ரல் 8ம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் துவங்குகிறது. மறுநாள், திருஞான சம்பந்தர் எழுந்தருளலும், என்பைப் பூம்பாவையாக்கி அருளலும் நடைபெறும். தொடர்ந்து மாலை வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் எழுந்தருளும் காட்சி நடைபெறும்.
மயிலாப்பூர் திருவிழா எனப் போற்றப்படும் இவ்விழாவைக் காண, பெருந்திரளான பக்தர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கே வந்து, மயிலை நகரெங்கும் கூடுகிறார்கள். மாட வீதிகளில் வலம் வரும் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் மரியாதை செய்து, வணங்கி பெருமான் அருள் பெறுகின்றனர்.
ஏப்ரல் 11ம் நாள் செவ்வாய் அன்று புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன் மாதேவரை வழிபடல் விழாவும், தொடர்ந்து திருக்கல்யாணம், கயிலாய ஊர்தி ஆகியவையும் நடைபெற்று, சண்டேஸ்வரர் விழாவுடன் நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 13ம் நாள், விழா நிறைவுறுத் திருமுழுக்கு நடைபெறும். பங்குனிப் பெருவிழாவின் பத்து நாட்களும் பகல் இரவுக் காலங்களில் ஐந்திருமேனிகள் திருவீதியுலா வருதல் சிறப்பாகும்.



