பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை விடுவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனக்கூறிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், விளைவுகளை பாகிஸ்தானில் கருத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில், இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பார்லிமென்டில் எதிரொலித்தது.
*கோரிக்கை:*
காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே கூறியதாவது: ஜாதவை பாகிஸ்தான் தூக்கில் போட்டால், அது கொலையாக தான் இருக்கும். அவரை விடுவிக்காவிட்டால், மத்திய அரசு பலவீனமான அரசாக மாறிவிடும் என்றார்.
எம்ஐஎம் கட்சியின் ஓவாய்சி கூறியதாவது: அரசுக்கு அனைத்து அதிகாரமும் செல்வாக்கும் உள்ளது. அதனை அரசு பயன்படுத்த வேண்டும். ஜாதவை அரசு காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமா? அவரை காப்பாற்ற வேண்டியது நமது கூட்டு பொறுப்பு. இவ்வாறு அவர் பேசினார்.
*கடத்தல்:*
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசுகையில், ஜாதவ் விவகாரத்தில், அடிப்படை சட்டம் மற்றும் நீதி மீறப்பட்டுள்ளது. குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதவ், முறையான பாஸ்போர்ட் வைத்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. அவர் ஈரானில் சிறு தொழில் செய்து வந்தார். அங்கு ஜாதவ் கடத்தப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
*கேலிக்கூத்து:*
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கூறுகையில், ஜாதவ் பெற்றோருடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. அவரை விடுதலை செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஜாதவ் இந்தியாவின் மகன். அவரை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமாகவும், விசாரணை கேலிக்கூத்தாகவும் உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளுங்கள். ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது, முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. எந்த விலை கொடுத்தாவது அவரை மீட்டு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.



