சேலம் அருகே திருமணத்திற்கு பெற்றோர் ஏற்பாடு செய்தது பிடிக்காததால் கல்லூரியின் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்தவர் சேட்டு. கொத்தனார். இவரது மகள் பிரியதர்ஷினி (20). இவர் கருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு வந்த பெற்றோர், மகள் திருமணம் குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
இதனிடையே மாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார். இதனைக்கண்டு அங்கு திரண்ட மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில் பிரியதர்ஷினிக்கு முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் பிரியதர்ஷினி கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்துள்ளனர். விரைவில் அவருக்கு திருமணம் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்தான் அவர் தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.