
சென்னை:
அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், வழக்கம் போல் கழுவிய நீரில் நழுவிய மீனாக நகர்ந்து கொண்டார். இன்று அவரிடம் பாரதிய ஜனதா கட்சியில் சேருவீர்களா? என்ற கேள்விக்கும் வழக்கம் போல் ஒற்றைச் சொல் பதிலளித்து நகர்ந்து கொண்டார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக சென்னையில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பின் துவக்கத்தில் பேசிய ரஜினிகாந்த், தம் பெயரை அரசியல் ரீதியாக சிலர் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறி, தமக்கும் அரசியல் ஆசை உள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டினார். தன்னை பயன்படுத்திக் கொள்பவர்கள் என அவர் குற்றம் சாட்டியது, திமுக, தமாகா, பாஜக.,வைத்தான் என ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாங்கள் ரஜினியை அரசியல் ஆதாயத்துக்காக சந்திக்கவில்லை என கூறினார். இவரது கருத்தையே கங்கை அமரனும் பிரதிபலித்தார். ஆயினும் ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் வரவேற்போம், மகிழ்ச்சி என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆனால் வழக்கம் போல், ரஜினிகாந்த் மேலே கையைக் காட்டி, ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டார். தாம் அரசியலில் இணைவது தொடர்பாக ஆண்டவன்தான் முடிவு செய்வார் என்றார்.
இப்படி இரண்டு நாட்களாக பரபரப்பாகக் கழிந்த ரசிகர் சந்திப்பு இன்று மூன்றாவது நாளை எட்டியது. இன்று 3-வது நாளில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனது சினிமா பட வசன பாணியில் கேள்விக்கு பதிலளித்துச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இன்று ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள், நீங்கள் பாஜக.,வில் சேருவீர்களா? என கேள்வி எழுப்பினர்.
வழக்கம் போல், ‘நோ கமெண்ட்ஸ்’ என்று பதிலளித்த ரஜினிகாந்த், தான் எப்போதும் அப்படித்தான் என்பதை செய்தியாளர்களுக்கும் சொல்லி, நிரூபித்தார்.



