காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்துவிடும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: விவசாயிகள் சங்க தலைவர்

சென்னை: காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்து விடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. கர்நாடக மாநிலக் கழிவுகளை காவிரியில் கலந்தால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்படும். இதை உடனே மத்திய அரசு அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தவேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்… காவிரியின் குறுக்கே அணைகட்டி தமிழகத்திற்கு வருகின்ற தண்ணீரை தடுத்து நிறுத்துகின்ற நோக்கத்தாடு கர்நாடக அரசு செயல்பட்டு வருகின்ற நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளையும் ஒற்றுமை ஏற்படுத்தி கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்திட மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகி வருகின்றது. இந்த சூழலில் காவிரி நீரில் கழிவு நீரை கலந்துவிடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. தமிழகத்திகு காவிரி தண்ணீர் பிரிந்து வருகின்ற பகுதியில் பெங்களூருவின் வீடுகள், அலுவலகங்களில் இருந்து தினமும் வெளியாகும் 1,400 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கால்வாய்கள் வழியாக தமிழகத்திற்குள் திறந்து விடுவதாகவும், மேலும் பெங்களூருவில் தினசரி பயன்படுத்தப்படும் 1,950 மில்லியன் லிட்டர் நீரில், சுமார் 60 சதவீதம் (889 மில்லியன் லிட்டர்) கழிவுநீர், பினாகினி மற்றும் தென்பெண்ணை ஆறுகள் வழியாகவும், மீதமுள்ள 40 சதவீதம் கழிவுநீரானது, அர்காவதி மற்றும் காவிரி கிளைநதிகள் மூலமாகவும் கலந்துவிடுவதாக அம்மாநிலத்தை சேர்ந்த சிறுபாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்திற்கும்காவிரி நீர் பெரிதும் பயன்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்கள் குடிநீர் ஆதரமாக காவிரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகம் ஓட்டுமொத்த கழிவு நீரையும் காவிரியில் கலந்துவிடுவதால் பேராபத்து ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் அவசரகால நடவடிக்கை எடுத்து மத்தியஅரசின் நீர் வளத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு பாரத பிரதமரை வலியுறுத்தி மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பிவைத்து காவிரி பாசன பகுதிகள் மற்றும் கழிவு நீர் கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கசெய்திட வேண்டும். அதுபோல் தமிழக எல்லையில் வருகின்ற காவிரி தண்ணீரின் தன்மை பற்றி ஆராயவேண்டும். கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்தாக்குதலுக்கு உள்ளாகின்ற பேராபத்துதிலிருந்து தமிழக மக்களை காக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.