கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார் முதல்வர் பழனிசாமி.
பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தி வரும் முதல்வர் பேசினார்.
பொது முடக்கம் வரும் மே 3ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், காய்கறிக் கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், ரேசன் கடைகள், காய்கறிக் கடைகளில் தனி மனித இடைவெளியை உறுதி செய்ய தன்னார்வலர்களை பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை கூறினார்.
மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், முகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், அதிக ஆட்கள் இருந்தால் 2 அல்லது 3 ஆகப் பிரித்து பணி வழங்க வேண்டும் என்றும் ஆட்சியர்களிடம் விவரித்தார்.
100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம் என்று கூறிய முதல்வர் பழனிசாமி, கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் சில தொழில்களுக்கு தளர்வு வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும் என்று உறுதி அளித்தார்.
கொரோனா குறைந்த பச்சைப் பகுதிகளில் தொழில் துவங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம் என்று அனுமதி வழங்கிய முதல்வர் பழனிசாமி, காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், எண்ணெய், ஜவ்வரிசி, முந்திரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற ஆட்சியர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.