விழித்திரு விலகியிரு வீட்டிலிரு – மார்ச் 25ல்! தனித்திரு குடித்திரு மயங்கியிரு- மே.7ல் : எடப்பாடியார் ‘ராக்ஸ்’!
மே 7ஆம் தேதிக்குப் பின்னர், ’விழித்திரு” “குடித்திரு” “ஓட்டை விற்றுவிடு” “குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திடு” என்ற ரீதியில் செல்கிறது தமிழகம். வரலாறு மாறுது நாளை முதல் பாண்டிச்சேரி காரவங்க வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டுக்கு தண்ணீ சரக்கு வாங்க வராங்க.. என்று கிண்டலும் கேலியும் தூள்பறக்கிறது சமூகத் தளங்களில்!
நாளை முதல் மதுபானக் கடைகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு விவரங்கள் குரித்து வெளியிடப் பட்டுள்ளது.
ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்; கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும்; கடைக்கு அரை கி மீ க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மதுக்கடைகள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. அதன்படி,
50-வயதிற்கு மேல் – 10.00 AM to 01.00 PM
40-50 வயதிற்குள் – 01.00 PM to 03.00 PM
40- வயதிற்குள் – 03.00 PM to 05.00 PM… என்று நேர ஒதுக்கீடு கொடுக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை உயர்த்தியது தமிழக அரசு. இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களின் மீது ஆயத்தீர்வை வரி 15% உயர்வால் மதுபானங்களின் விலை அதிகரிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும்
ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தியுள்ள காரணத்தினால்,
சாதாரண வகை 180 மி.லி. பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை
விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி.
பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும்
07.05.2020 முதல் உயர்த்தப்படுகிறது… என்று செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக அரசின் ‘மதுக்கடைகள்’ திறப்புக்கு பெரும் அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆச்சரியகரமாக திமுக, தலைவர் மு.க.ஸ்டாலின் கூட தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார், தனது கண்டனத்தில் வித்தியாசமாக, “படிப்பகம்” மூடியிருக்க “குடிப்பகம்” திறப்பதா? என்று வீராவேசக் குரல் எழுப்பியுள்ளார்.
அவர் இது குறித்து கோரிக்கை விடுத்தபோது, மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றார்.
“கொரோனா” நோய் தொற்று காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் “மக்கள் ஊரடங்கு அனுசரிக்க வேண்டும்”; “இலட்சுமண ரேகை “போட்டு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று பாரதப் பிரதமரும் அறிவித்தார். அதை அனுசரித்து தமிழக முதல்வரும் பல கட்டுப்பாடுகளை விதித்தார்கள். “வாழ்க்கை சிரமங்கள்” பல இருந்தாலும்பொதுமக்கள் விதிகள் அனைத்தையும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வழியில்லாமல் இருக்கிறது. “திருவிழாக்கள் இல்லை தேரோட்டம் இல்லை.” இந்தநிலையில் மக்கள் ஊரடங்கு தளர்வு செய்வதற்காக மத்திய அரசு அறிவித்த “விதி தளர்வு” காரணமாக “மதுபான கடைகள் “அரசு விதிகளை பின்பற்றி திறக்கலாம் என்கின்ற உத்தரவு பிறப்பிக்கிறது.
மதுக் கடைகள் திறக்க கூடாதுமக்கள் மனமாற்றம் அடைந்து இருக்கிறார்கள் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று நீதிமன்றம் சென்றால் “அரசு கொள்கை முடிவில்
தலையிட முடியாது” என்று மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்த காரணத்தால் தமிழ்நாடு
அரசும் கட்டுப்பாட்டு விதிகளுடன் மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப் போவதாகஅறிவிக்கிறது. இந்த உத்தரவால், குடிமக்கள் கூடுவதால் “சமூகத்தில் நோய் பரவலை” அதிகரிக்கச் செய்ய வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மதுக்கடைகள் மூடியதால் கடந்த 40 நாட்களாக குற்ற சம்பவங்கள் பெரிய அளவில் இல்லை. மக்கள் வீடுகளில் பிரச்சனை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ரோடுகளில் விழுந்துகிடக்கும் குடிமகன்கள் இல்லை. வழிப்பறி, மது குடியால் கொலைகள் இல்லாது குற்றங்கள் குறைந்த தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
குடிமகன்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வீடுகளில் “மதுபானம் வேண்டாம்” என்ற எண்ணம் உருவாகி “மனமாற்றம்” ஏற்பட்ட நேரத்தில் அரசு மதுபான கடைகள் திறப்பது என்பது குடும்பத்தினரின் மகிழ்ச்சியை மீண்டும் கெடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்.
“கொரோனா” நோய்குறைந்த அளவுநோய் பரவியிருந்த நேரத்தில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த அரசு நோய் பரவல் அதிகமான பிறகு மக்கள் அதிகம் கூடும் “டாஸ்மாக்”கடை திறப்பது என்பது நன்மையாக தெரியவில்லை.
“எரிகின்ற நெருப்பை அணைக்க பெட்ரோல் ஊற்றும் கதையாக மாறிவிடும்”
“விதி தளர்வு” அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல்மாணவர்கள் படித்து அறிவு வளர்ச்சி பெறுவதற்கும் வழியில்லை. தேர்வு நடைபெறாமல் பள்ளிக்கூடங்கள் (படிப்பகம்) மூடப்பட்டிருக்கிறது. மனிதர்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றும் வழிபாட்டு இடங்கள், கோயில்களில் சமூக இடைவெளியை பின்பற்றி திறப்பதற்கு எந்த முயற்சியும் அரசு எடுக்கவில்லை. அதேநேரத்தில் “உபரி நிதி”பொது நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு அறநிலையத் துறை திரும்பப் பெற்றது.
“கொரோனா” நோய் அரக்கன் நாட்டு மக்களை வீட்டுச் சிறையில் வைத்திருக்கும் போது கூடுதலாக “மது” அரக்கன் வந்துவிட்டால் “பால் “அதிகம் தேவைப்படும். காபி போட அல்ல. ஆகவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வரும் 7ஆம் தேதி மதுக்கடைகள் பிறக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டுகிறோம். மது உற்பத்தி ஆலைகள் வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் ஆளும் கட்சி எதிர்க் கட்சி சார்ந்த முக்கிய பிரமுகர்களே!
இவர்கள் வியாபார நோக்கத்தை தள்ளி வைத்து மக்களை பாதுகாக்க இவர்கள் மனம்மாற வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் “அரசு மதுபான கடைகள் திறக்கக் கூடாது” மது உற்பத்தி ஆலைகளும் செயல்படக் கூடாது என்று அறிக்கை வெளியிடுவார். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி டாஸ்மாக் கடைகள் திறக்கலாமா? வேண்டாமா? என்று கருத்து கேட்பு கூட்டம் கூட்ட வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் வைப்பார் என்று எதிர்பார்க்கிறேன். “தாலிக்குதங்கம்” கொடுத்து வாழ்வு கொடுத்து, வாழவைக்கும் தமிழக அரசு கொடுத்த “தாலியை பாதுகாக்க”
தேவையான நடவடிக்கையை ஒரு “குடும்பத் தலைவன்” அக்கறை உணர்வுடன் செயல்பட வேண்டும். என்பது தமிழக மக்கள் பலரின் எண்ணமாக இருக்கிறது.
ஆகவே தமிழக அரசு மே 7-ஆம் தேதிடாஸ்மாக் கடைகள் திறக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். தமிழக மக்களை பாதுகாக்க நிரந்தரமாக மதுக்கடைகள் மூட அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு நல்கி தீர்மானம் இயற்ற வேண்டும். “மதுவில்லா தமிழகம் மகிழ்ச்சியான பாரதம்” என்கின்ற அடிப்படையில் மத்திய மாநில அரசுகள்” பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்” என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்… என்று அக்கட்சியின் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் தெரிவித்துக் கொண்டார்.