குற்றாலத்தில் கடும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை குற்றாலம் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இன்று மாலை திடீரென மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், குற்றால அருவிக்கு வரும் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அருவியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மாலை தொடங்கி இரவு நேரத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் வழிந்தோடியது.
முன்னதாக, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்… தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.
திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று கூறப் பட்டிருந்தது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் 4 சென்டி மீட்டர் மழையும், ராமநாதபுரம் கடலாடி பகுதியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.