மதுரையில் சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் சார்பாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சுமார் 5 லட்சம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு இதனைத் தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25ஆம் தேதி முதல் மதுரையில் சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் சார்பில் பல்வேறு சேவைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
ஊரடங்கின் காரணமாக பசியால் வாடும் ஏழைகளுக்கும், அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் மூன்று வேளையும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதுவரை 1,42,500 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய 7,460 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,10,000 பேருக்கு கபசுர குடிநீர், 10,000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய சேவைப் பணிகளால் நேரடியாக சுமார் 1,65,000 பேர் பயனடைந்துள்ளனர்.
தற்போது அரசு பரிந்துரைத்துள்ள ஆர்ச்சனிச்ம் ஆல்பம் 30 என்கிற நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் சார்பாக மதுரையில் சுமார் 5 லட்சம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை 9மணிக்கு மதுரை எஸ்.எஸ் காலனி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி. ஜெயபிரகாசம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் இரா.தீனதயாளன், அகில இந்திய ஹோமியோ லீக் மதுரை தலைவர் மரு.தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை குறைந்தது 20 குடும்பங்களுக்கு அல்லது 100 பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய விருப்பம் உள்ள சமூக ஆர்வலர்களை சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் வரவேற்பதாகவும், தங்கள் விருப்பத்தை
இராமச்சந்திரன் ( 94861 08686 ), சதீஷ் பாபு (95972 79061) ஆகியோரைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் மருந்தைப் பெற்று கொள்ளலாம் என்றும் சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் சார்பில் அதன் டிரஸ்டி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.