மதுரை: பொதுவாக நாம் கழிவுநீர் கால்வாயைதான் பார்த்திருக் கிறோம், ஆனால் மதுரை நகரில் குப்பைக் கால்வாயை காணமுடிகிறது.
சாலை, குடிநீர், கால்வாய் மேம்பாடு, தெருவிளக்கு ஆகியவை வழங்குவது உள்ளாட்சி நிர்வாகத்தின் பணியாகும். ஆனால், மதுரை நகரை பொறுத்தமட்டில், கால்வாய் மேம்பாடு, சாலை வசதி என்பது கிராமத்தைக் காட்டிலும் குறைந்து காணப்படுகிறது.
கிராம ஊராட்சிகளை பொறுத்தமட்டில், சாலை மேம்பாடு, கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் பணிகளில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள் கின்றனர். காரணம், கிராமங்களை பொறுத்தவரை எந்த பிரச்னையாக இருந்தாலும், கிராம மக்கள் ஊராட்சி்த் தலைவர், ஊராட்சி செயலரிடம் நேரிடையாக தொடர்பு கொள்ள முடிகிறது.
நகராட்சி, மாநகராடசிகளை பொறுத்தமட்டில், மக்கள் உயர் அதிகாரிகளை தொடர்பு என்பது மிக குறைவுதான். வாரத்தில் திங்கள்கிழமை மட்டுமே, மக்கள் குறை தீர்க்கும் நாள்களில் மட்டுமே சந்திக்க முடியுமாம்.
மதுரையை பொறுத்த மட்டில் 70 வார்டுகளாக இருந்ததை, கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி, ஊராட்சிகளை மதுரை மாநகராட்சி இணைத்து 100 வார்டுகளாக உயர்ந்தது.
இந்த நிலையில் புதியதாக சேர்க்கப்பட்ட வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை வசதிகள் மிக குறைவாகதான் இருக்கின்றன.
மதுரை மேலமடை வீரவாஞாசி தெரு, சௌபாக்யா விநாயகர் கோயில் தெரு, வள்ளாலார் தெரு, கோமதிபுரம் குருநாதன் தெரு, ஜூப்பிலி டவுன் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால், மழைகாலங்களில் கழிவு நீர் வீடுகளில் வாசலை சுற்றி வளைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் முத்துமாரியம்மன் கோயில் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயானது, கழிவுநீர் செல்ல வழியில்லாமல், குப்பைகள், பாட்டில்கள், மரம் செடி கொடிகள் அடர்ந்து காணப்படுகிறது.
இதனால், இரவு நேரங்களில் இப் பகுதிகளில் கொசுத் தொல்லைகள் பெருகி வருவதாக அப் பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, மதுரை மாநகராட்சி ஆணையாளர் தலையிட்டு, மதுரை மேலமடை பகுதியில் நிலவம் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் பகுதிகளில் சாலை மேம்பாடு பணிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்க இப் பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
செய்திக் கட்டுரை: ரவிச்சந்திரன், மதுரை