சுஷ்மா சுவராஜ் உட்பட தனது அமைச்சரவையில் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை சிறந்த
நிர்வாகத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்பதற்கு சிறந்த உதாரணமாக இருப்பதாக
பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி விர்ஜினியாவில்
இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“சமூக வலைதளங்கள் தற்போது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறிவிட்டது. நானும்,
அதில் இணைந்து இருக்கிறேன். ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சகமும் துறை அமைச்சர்
சுஷ்மா சுவராஜும், சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்கள் துறையில் எவ்வாறு
சிறந்த சேவையை செய்வது என்பதில் மிகச்சிறந்த முன்னுதாரணத்தை
உருவாக்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், சிக்கலில் உள்ள இந்தியர்கள் உலகின் எந்த முனையில் இருந்து டுவிட்
செய்தாலும் உடனடியாக பதில் அளிக்கும் பழக்கத்தை சுஷ்மா சுவராஜ்
கொண்டிருப்பதாகவும் மோடி வெகுவாக பாராட்டினார்.
இது குறித்து மோடி கூறும் போது, “ உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும்
துயரத்தில் இருக்கும் இந்தியர்கள் டுவிட் செய்தால், நள்ளிரவு 2 மணியாக
இருந்தாலும் சுஷ்மா சுவராஜ் 15 நிமிடங்களில் பதிலளிப்பார். அரசு உடனடி
நடவடிக்கை எடுத்து பலனை கொடுக்கும். இதுதான் மிகச்சிறந்த நிர்வாகம்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.




