
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதி நிகழ்ந்த சாலை விபத்தில், திருச்சுழி டி.எஸ்.பி வெற்றிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் உப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர், 6 மாதம் முன்புதான் திருச்சுழியில் டிஎஸ்.பி.யாகப் பணியில் சேர்ந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றுபவர் வெற்றிவேல். இவர் தனது நண்பரின் கார் ஒன்றை எடுத்துக் கொண்டு, விருதுநகரில் இருந்து திருச்சுழி நோக்கிச் சென்றார். தனியாக பயணித்துக் கொண்டிருந்த அவர், அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் என்ற இடத்தில் வளைவு ஒன்றைக் கடந்தபோது காரின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் கார், வலதுபுறத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் முன்புற கண்ணாடி மீது வெற்றிவேலின் தலை பலமாக மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டி.எஸ்.பி. வெற்றி வேல், காரில் சென்ற போது, சீட் பெல்ட் அணியாமல் சென்றார் எனத் தெரிகிறது. அதுவே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.



