
திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட துரைசாமிபுரம் என்ற பகுதிக்கு அருகேயுள்ள புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ஸ்ரீனிவாசனின் மகளின் பெயர் சினேகா. இவருக்கு அடுத்த வியாழக்கிழமை அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
19 வயதான சினேகா. மதுரை திருப்பாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் சினேகா வீட்டில் இருந்து வந்தார். சினேகாவுக்கும், மெய்யனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வரும் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை கிராமத்தின் அருகில் உள்ள மலையடிவாரத்தில் இவர்களுக்குச் சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்திற்கு சினேகா சென்றிருந்தார். அப்போது தோட்டத்திலுள்ள ஒரு மரத்தில் சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சினேகா மரத்தில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்த அங்கிருந்தோர் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்
தகவல் அறிந்து சென்ற போலீசார் சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து தற்கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தற்கொலை செய்துகொண்ட இடத்தின் அருகில் ஆய்வு செய்தபோது சினேகா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.
அதை வைத்து விசாரித்தபோது, கல்லூரிக்கு சென்று வரும் போது மதுரை புதூரில் உள்ள உறவினர் ஒருவரின் மகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையில் காதலாக மலர்ந்துள்ளது; காதல் விவகாரம் சினேகா வீட்டுக்கு தெரிந்து விசாரித்துள்ளனர். ஏற்கெனவே இரு குடும்பத்திற்கும் இடையில் நீண்டநாள் பகை உள்ளதால், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சினேகா தனது காதலில் உறுதியாக இருந்ததால், அவசர அவசரமாக வேறு ஒருவருடன் பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.
ஆனால் நிச்சயத்தை ஏற்காத சினேகா காதலனுடன் சேர்த்து வைக்குமாறு பெற்றோரிடம் போராடி வந்துள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் சினேகாவின் பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு சினேகா தனது காதலனுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார். அதன் பிறகு நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டில் இருந்து புறப்பட்டு மலை அடி வாரத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு மரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
சினேகாவின் தற்கொலை கடிதத்தை வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றி பெற்றோர், உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.