
சென்னை:
தி.மு.க செயல் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மு.க.ஸ்டாலினுக்குக் கடந்த சில தினங்களாகக் கண்ணில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கண்ணில் புரை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின், கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு வந்தார். இங்கு அவருக்கு மதியம் 12.30 மணி வரை சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்ணில் சில இடர்ப்பாடுகள் இருந்ததாகவும், சிகிச்சைக்குப் பின்னர் அவர் முழு நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
கண் சிகிச்சை காரணமாக அவர் இன்று சட்டசபைக்கு வரவில்லை. இதனால் சட்டசபையில் குட்கா, பான்மசாலா தொடர்பான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.



