“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே?
பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன்.
இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு…”-பெரியவா
(மலைப்பாதை படிகள் வழியே பெரியவாளை அழைத்து
சென்ற வித்யார்த்தி “படி படி’ என்று எச்சரிக்கை விட்டுண்டே
போனபோது-பெரியவா சொன்னது மேலே)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (179)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
ஏழுமலையான் சந்நிதியை நோக்கி நடைப்பயணம்
மலைப்பாதை வழியாக -பெரியவாள்.
கண்பார்வை மங்கியிருந்தது.
சமவெளியாக இருந்தால்,கால்களை நீட்டி வைத்துப்
போய்விடலாம்.ஆனால், இங்கே பாதையே படிகளால்
ஆனது.தொண்டர் வித்யார்த்தி நாராயணன் என்பவர்,
மகாப் பெரியவாளைக் கையை பிடித்து அழைத்துச்
செல்வது போல்,மிக அருகிலிருந்தபடி,’படி,படி’ என்று
உரத்த குரலில் சொல்லிக் கொண்டே வந்தார்.பெரியவாள்
கவனமாக காலை உயரத் தூக்கி மேலேயிருந்த படியில்
வைத்து நடந்து கொண்டிருந்தார்கள்.
வித்யார்த்தியின் குரல், மலைகளில்,’படி,படி’ என்று
எதிரொலித்தது.பெரியவாள் ஒரு படியில் நின்றுவிட்டார்கள்.
“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே?
பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன்.
இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு…”-பெரியவா
வித்யார்த்தி நடுங்கிப் போய் விட்டான்.
“பெரியவா மன்னிக்கணும். பெரியவா சரஸ்வதி ஸ்வரூபம்..”
அவசரப்பட்டு விட்டவனைப் போல உடைந்த குரலில்
கெஞ்சினான், வித்யார்த்தி.
“அப்போ…நான் இன்னும் பிரம்மஸ்வரூபம் ஆகலே..
என்கிறாயா?”
வித்யார்த்திக்குத் தொண்டையை அடைத்துக்கொண்டது.
பெரியவாள் லிமிட்டைத் தாண்ட மாட்டார்கள்.
“இனிமேல், படி வந்தால், “கோவிந்தா…கோவிந்தா..ன்னு
சொல்லு…புண்ணியமாவது கிடைக்கும்.
குன்றுகள் வித்யார்த்தியின் குரலை எதிரொலித்தன.
காற்றின் ஒவ்வொரு வீச்சிலும் ‘கோவிந்தா’க்கள்.
பெரியவாள் ஓர் இளஞரைப் போல, வேகமாகப்
படிகளில் ஏறினார்கள்.




