சாத்தான்குளம்: ஆய்வாளர் உள்பட போலீஸார் 5 பேர் அதிரடி கைது! மகிழ்ச்சி தெரிவித்த மக்கள்!

Published:

sathankulam police station
sathankulam police station

சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீஸாரால் அடிக்கப் பட்டு உயிரிழந்த வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகனேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் என 5 பேர் அதிரடியாகக் கைது செய்யப் பட்டனர். இந்தச் செய்தி அறிந்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்கு அருகில் உள்ள சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டு, போலீஸாரின் தாக்குதலால் உயிரிழந்த விவகாரம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அவர்கள் இருவரும் போலீஸாரால் மோசமாக சித்ரவதை செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சிபிஐ வசம் மாநில அரசால் ஒப்படைக்கப் பட்டது. எனினும், அதற்குள்ளான கால அவகாசத்தில், தடயங்கள் அழிக்கப் பட்டு விடலாம் என்பதால், நீதிமன்ற உத்தரவில், சிபிசிஐடி போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனர். இதற்காக 12 குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் குடும்பத்தினரிடமும் அவர்கள் வைத்திருந்த செல்போன் கடையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இருவருக்கும் சிகிச்சை அளித்த மருத்துவர், எழுத்தர் ஆகியோரிடமும் விசாரிக்கப்பட்டது.

sathankulam police arrested
sathankulam police arrested

இந்த வழக்கை கொலை வழக்காகவே பதிவு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகு கணேஷ் நேற்று சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப் பட்டார். இவர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறும், ஜூலை 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக, எஸ்ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் தலைமறைவாகி இருந்தனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன், முருகன் ஆகியோர் இன்று அதிகாலை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
sathankulam son and father
sathankulam son and father

மேலும், தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜும் கைது செய்யப் பட்டார். 4 பேர் மீது கொலை வழக்கு பதிவான நிலையில் 4 பேரும் நேற்றும் இன்றும் கைது செய்யப்பட்டன. கைதான பாலகிருஷ்ணன், முருகன், முத்துராஜ் மூவருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபின், இன்று காலை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் படுவர் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறினர்.

இதனிடையே, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், கோவில்பட்டி அருகே சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப் பட்ட நிலையில், அவர் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அழித்தல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர், “சி.பி.சி.ஐ.டி. இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் ஒன்றை கொலை வழக்காக பதிவுசெய்து ஒரு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சில அதிகாரிகள் பற்றி நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இதனிடையே நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த நெடுங்குளம் மக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img