மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ‘இருட்டுக் கடை’ : தாத்தா இடத்தில் பேரன்!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
iruttukadai-halwa-shop
iruttukadai-halwa-shop

திருநெல்வேலிக்கு புகழ் சேர்த்த இருட்டுக்கடை அல்வா இப்போது மிண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்காலிகமாக மூடப்பட்ட கடை மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. இது, அப்பகுதி மக்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருநெல்வேலி டவுனில், நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே இருக்கும் இருட்டுக்கடை அல்வா, உலகம் முழுக்க பிரபலமாகி விட்டது. 1940களில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்ட கடை இது. மிகவும் சிறியதாக ஒரு பெட்டிக் கடை அளவில் தொடங்கப்பட்ட இந்தக் கடையின் புகழ், தற்போது உலகம் முழுக்க பல நாடுகளில் பேசப்படும் அளவுக்கு உள்ளது.

பிஜிலி சிங்கின் மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படும் இந்தக் கடை, தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது எனலாம். அண்மையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங் கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார். இது மிகப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

ஹரி சிக்குக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து மனஅழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மக்களை மட்டுமின்றி, தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய மரணங்களில் ஒன்றாக இது ஆகிப் போனது.

இதனால் மீண்டும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் சுவையை நாம் ருசிக்க முடியுமா என்று நெல்லை மக்கள் நினைத்தனர். ஹரி சிங் இருந்தவரை அவரின் வீட்டு உறுப்பினர்கள் எவரும் பெரிதாக கடைக்கு வந்தது இல்லை. இருட்டுக் கடையை அவர்கள் பெரிதாக கவனித்துக் கொண்டதில்லை. எனவே தொடர்ந்து இருட்டுக்கடை செயல்படுமா என்று கேள்வி எழுந்தது.

இந்நிலையில் நேற்று மீண்டும் இருட்டுக்கடை அல்வா கடை திறக்கப்பட்டது. ஹரி சிங்கின் பேரன் சூரத் சிங் கடையை திறந்து வைத்தர். இனி கடை பொறுப்பை அவரே கவனித்துக் கொள்வார் என்று கூறப்பட்டது.

சூரத் சிங் இது குறித்து கூறுகையில், இது எங்கள் குடும்பம் நடத்திய கடை. என் தாத்தா கவனித்துக் கொண்ட கடை. அவர் மிகவும் சுத்தமாக நேர்மையாக கடையை நடத்தினார். அவருக்கு அடுத்து நானும் அவரை போல கடையை நடத்த வேண்டும். கடையை தொடர்ந்து நடத்துவேன், விட்டுவிட மாட்டேன். அதே சுவையுடன் இருட்டுக் கடை அல்வா தொடர்ந்து மக்களுக்கு கிடைக்கும் என்றார்.

மாலை 5.30 மணியில் இருந்து வெறும் 2 மணி நேரம்தான் கடை திறந்திருக்கும். நேற்று கடை திறந்து சில நிமிடங்களில் மொத்தமாக அல்வா விற்றுத் தீர்ந்துவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.