
சென்னை:
தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் போது, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகை ஓவியாவுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்பவர்கள் வெளியுலகத் தொடர்பின்றி, 100 நாட்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்க வேண்டும். இதற்காக சென்னை, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் வீடு போன்ற அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற நடிகை ஓவியா, சக பங்கேற்பாளரான ஆரவ்வை காதலித்ததாகவும், அதை அவர் ஏற்க மறுத்ததால் மனமுடைந்து மனநிலை பாதிக்கப்பட்டு ‘பிக்பாஸ்’ வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கினார் என்றும், அவரை சினேகன் உள்ளிட்டோர் காப்பாற்றுவது போன்றும் காட்சிகள் ஒளிபரப்பானது.
ஆனால், அதற்கு முன்னதாகவே ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. அதனை ஓவியாவும் உறுதி செய்ததாகவும் கூறப்பட்டது. இதனால் போலீசார் பிக்பாஸ் நிகழ்ச்சி செட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறி சொந்த ஊருக்குச் சென்று விட்டதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்து வக்கீல் எஸ்.எஸ்.பாலாஜி என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த மனு மீது விசாரணை நடத்த நசரத்பேட்டை போலீசாருக்கு ஆணையர் உத்தரவிட்டார். மேலும், எஸ்.எஸ்.பாலாஜியும் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நடிகை ஓவியா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, “நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் அவரது மேலாளரிடம் போனில் பேசினோம். அதற்கு அவர், தற்போது ஓவியா சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருப்பதாகவும், சிகிச்சை முடிந்து வந்ததும் நேரில் அழைத்து வந்து அவரது தரப்பு விளக்கத்தை அளிப்பதாகவும் கூறினார்” என்று தெரிவித்தனர். எனவே, சிகிச்சை முடிந்து வந்ததும் ஓவியா, நசரத்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே ஓவியா, ஒரு விளையாட்டுக்காகவே, தான் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதுபோல் நடித்ததாகக் கூறி இருப்பது போன்ற வீடியோ பதிவுகளை அந்தத் தொலைக்காட்சி நிர்வாகம் போலீசாரிடம் அளித்துள்ளதாம். எனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட சினிமா கதை போன்ற படப்பிடிப்புதான் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.



