
சென்னை:
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனேயே குட்கா விவகாரத்தில் திமுக.,வினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை உரிமைக் குழுவைக் கூட்டியிருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், குட்கா விவகாரத்தில் சட்டப்பேரவையில் காட்டிய ஆதாரங்கள் உண்மையானவை. ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே பேரவை உரிமை குழு கூட்டம் கூட்டப் பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சட்டப்பேரவை உரிமைக் குழுவை கூட்டி உள்ளனர். பெரும்பான்மையை இழந்த பழனிச்சாமி ஆட்சி சட்டமன்ற அவை உரிமைக் குழுவை கூட்டுவது தவறானது.
தமிழகத்தில் சட்டவிரோத அமைச்சரவை நீடிக்க ஆளுநர் இடமளித்துவிடக் கூடாது. சட்டமன்றத்தைக் கூட்டி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முயல்வது பழனிசாமி அரசைக் காப்பாற்றும் செயலே. எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெறும்போது ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை உறுதி செய்ய ஆளுநர் உடனடியாக பேரவையைக் கூட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.



