எட்டு விரைவு ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் ரயில் பெட்டி ஒன்று: ரயில்வே

சற்றுமுன்

சென்னை: எட்டு விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த விவரம்: கோயம்புத்தூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.12647/12648) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து வருகிற 22-ந் தேதியும், ஹஸ்ரத் நிஜாமுதீனிலிருந்து 25-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. திருச்சி-ஹவுரா இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் திருச்சி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12664/12663) கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை திருச்சியிலிருந்து நாளை முதலும், ஹவுராவிலிருந்து வருகிற 22-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. கோயம்புத்தூர்-சென்னை சென்டிரல் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12682/12681) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து நாளை முதலும் சென்னை சென்டிரலிருந்து வருகிற 21-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12682/12681) கூடுதலாக 2 படுக்கை வசதி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட இருக்கிறது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து நாளை முதலும், சென்னை சென்டிரலிருந்து வருகிற 21-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை சென்டிரல்-ஜம்மு தாவி இடையே இரு மார்க்கமாகவும் (வாரம் மூன்று முறை) இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16031/16032) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னை சென்டிரலிருந்து நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. ஜம்முதாவியிலிருந்து நாளை முதல் செயல்பட இருக்கிறது. சென்னை சென்டிரல்-லக்னோ இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வார இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16093/16094) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னையில் 21-ந்தேதியும், லக்னோவிலிருந்து 23-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரஇருக்கிறது. ராமேசுவரம்-குஜராத் மாநிலம் ஒகா இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16733/16094) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை ராமேசுவரத்திலிருந்து நாளை முதலும், ஒகாவிலிருந்து வருகிற 24-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. சென்னை சென்டிரல்-பழனி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22651/22652) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. பழனியில் இருந்து இன்று முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.