
கட்டுரை: ஜெயஸ்ரீ எம் சாரி, நாக்பூர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் சாபர்மதி ஆசிரமம் அனைவரும் அறிந்ததே. விதர்பா பகுதியிலும் வர்தா மாவட்டத்தில் சேவாகிராமில் உள்ள பாபு குடி (Bapu Kutti) என்றழைக்கப்படும் காந்தியடிகளினால் துவங்கப்பட்ட ஆசிரமமானது சுதந்திர போராட்ட வேள்வியில் முக்கிய பங்காற்றியது. இன்றும் சிறப்பான பொலிவுடன் பலருக்கும் உத்வேகம் அளிப்பதாய் பாபு குடி விளங்குகின்றது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்த காந்தியடிகள், பல அமைப்புகளை தொடங்கி வைத்தார். இன்றும், அவையெல்லாம் வர்தாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

வராற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, 1930- ம் வருடம் மகாத்மா காந்தியடிகள் உப்பு சத்யாகிரகத்தை பாதயாத்திரை மூலமாக தொடர்ந்த போது, இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தராமல் சாபர்மதி ஆசிரமுக்கு வருவதில்லை என முடிவெடித்திருந்தார். இடையில் இரண்டு ஆண்டுகாலம் பிரிட்டிஷ் அரசினால் காந்தியடிகள் சிறைப்படுத்தப் பட்டார்.
சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டவர், இரண்டு வருடங்கள் பிரயாணத்தில் செலவழித்தார். அதன் பிறகு, காந்தியடிகள் மத்திய இந்தியாவில் தன் தலமை அலுவகத்தை இயக்க விரும்பினார். அதன்படி, காந்தியடிகளின் அபிமானியான ஜம்னாலால் பஜாஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று 1934- ம் வருடம் தன் 67 -வது வயதில் வர்தா வந்தடைந்தார்.

காந்தியடிகள் ஒரு கிராமத்தில் தங்கி, கிராம மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பி, வர்தாவில் இருந்து எட்டு கிலோமீட்டரில் இருந்த ஷேகாவ் ( Shegaon) கிராமத்தை தேர்ந்தெடுத்தார். உள்ளூர் பொருட்களை கொண்டே, ஆசிரமம் கட்டவேண்டும் என்றும், கட்டச் செலவு ரூயாய் 100 க்கு மேல் போகக் கூடாதென்றும் உத்தவிட்டார்.
தன் மனைவி கஸ்தூரி பா மற்றும் சில நண்பர்களுடன் காந்தியடிகள் அங்கு தங்கினார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு இடங்களின் பெயர்கள் ஷேகாவ் என்றிருந்ததால் வர்தா மாவட்டத்தில் இருந்த ஷேகாவிற்கு சேவாகிராம் ( சேவையின் கிராமம்) என்று மாற்றப்பட்டது.
இந்திய சுதந்திரப் போராடத்தில் பல முக்கிய முடிவுகளை காந்தியடிகள் சேவாகிராம் ஆசிரமத்தில் இருந்துதான் எடுத்ததாக பல புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றும் கூரை வேய்ப்பாடு, மூங்கிலால் ஆன தூண்கள், மண் தரை, மண் சுவர்கள் என உள்ள ஆதி நிவாஸ் (காந்தியடிகள் முதலில் தங்கியது), பாபு குடி, பா (Ba) குடி, ‘ லாஸ்ட் ரெஸிடென்ஸ்) முதலியவை அருமையாய் இன்றும் பராமரிக்கப் படுகிறது.
கூழாங்கல்லினால் அமைக்கப்பட்ட பாதையும், சுத்தமான சுற்றுப்புறமும், நெடிய மரங்களும் ஆசிரமத்தின் அழகை மெருகூட்டுகின்றன..

பாபு குடியில் காலையும், மாலையும் சர்வதர்ம பிரார்த்தனை தினமும் நடைபெறுகிறது.
ஆசிரமத்தில் உள்ளோர் காந்தி ராட்டையில் பருத்தியிலிருந்து நூல் நூற்றுக் கொண்டே பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
சேவாகிராம் ஆசிரமம் காந்தியடிகளின் வரலாற்றையும், அவர்தம் தத்துவங்களையும், அமைதியையும், அஹிம்சையையும் வலியுறுத்தும் சின்னமாக திகழ்கிறது. பார்வையாளர்களுக்கும், உலகுக்கும் உத்வேகம் தரும் இடமாய் விளங்குகிறது பாபு குடி என்னும் சேவாகிராம் ஆசிரம் என்றால் மிகையாகாது.