
லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக, சிறப்பு எஸ்.ஐ., உள்பட, இரண்டு பேர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியில் இருந்து கடலூருக்கு, எம்.சாண்டு ஏற்றிக் கொண்டு, நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வழியாக லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை, டிரைவர் ஜெயபால் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம், லாரி, நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா பகுதியில் சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு எஸ்.ஐ., செந்தில், போலீஸ் தர்மராஜ் ஆகியோர், லாரியை நிறுத்தி, பணம் கேட்டு டிரைவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ, நேற்று, சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, எஸ்.பி., சக்தி கணேசன் விசாரணை நடத்தி, இருவரையும், ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார்.