காவிரியில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை தடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலிறுத்தல்

Published:

Alamatti_dam சென்னை: காவிரியில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதைத் தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது உள்பட 3 இடங்களில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்துள்ள தடுத்து நிறுத்துவது, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் பங்கீட்டு குழு அமைக்க வலியுறுத்துவது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் பலராமன், பாமக சார்பில் வேலு, ஜெயராமன், த.மா.கா. சார்பில் ஞானதேசிகன், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்பட கட்சித் தலைவர்களும் பல்வேறு தமிழ் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மீத்தேன் திட்டத்தை எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று வெற்றி பெற்றதைப் போல், காவிரியில் நமது உரிமைகளைப் பெறவும், கர்நாடகம் தடுப்பணைகள் கட்டுவதை தடுக்கவும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் கருத்து தெரிவித்தனர். அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1
காவிரி படுகை மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 2012ம் ஆண்டிலிருந்து விவசாய சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன. இந்த நிலையில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோளுக்கு இனங்க கடந்த ஜனவரி 28ம் தேதி அன்று சென்னையில் ஆளுநர் மாளிகை முன் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் பங்கு கொண்ட மாபெரும் ஆர்பாட்டத்தில் மத்திய அரசு மீத்தேன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் அவர்களுக்கு அனைத்து கட்சி தலைவர்களும், விவசாய சங்க நிர்வகிகளும் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை, மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் வழியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.
அந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த பாரத பிரதமர்  உயர்திரு. நரேந்திர மோடி அவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இத்திட்டத்திற்கு உரிமம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கிய உரிமையை ரத்து செய்ய நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் உயர்திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் அறிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, தமிழகத்தில் அனைத்து கட்சிகள் ஒருங்கிணைப்புக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
எனவே இத்திட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், விவசாய சங்கங்களுக்கும், நமது கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த மேதகு ஆளுநர் அவர்களுக்கும், பாரத பிரதமர் அவர்களுக்கும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் அவர்களுக்கும், இத்திட்டத்தை செயல்படுத்த விடாமல் இடைக்கால தடைவிதித்த தமிழக அரசுக்கும் பெட்ரோலியத்துறை செயலாளர்கள், மற்றும் அரசுத்துறை செயலாளர்களுக்கும், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இத்திட்டத்தை முழுமையாக கைவிடவேண்டும் எனவும் மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மேலும், தமிழகத்தின் உணவு உற்பத்திகளமாக விளங்குகின்ற தஞ்சை காவிரி டெல்டாவை ஒருங்கிணைந்த பாதுகாக்கபட்ட வேளாண்மண்டலமாக இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் மூன்று அணைகளை கட்டி தமிழகத்திற்கு கிடைக்கும் உபரி நீரையும் தடுத்து நிறுத்தி தமிழக காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் வஞ்சக நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே 7 அணைகளையும், 3 ஆயிரம் ஏரிகளையும் உருவாக்கி தண்ணீரை தடுத்ததன் விளைவு முப்போகம் விளைந்த காவிரி டெல்டா தற்போது பல ஆண்டுகளாக ஒருபோக சம்பா சாகுபடிக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கடந்த 2012-&13ல் மட்டும் வறட்சியால் பாதித்து பயிர்கள் கருகுவதை பார்த்து 9 பேர் தற்கொலை மரணத்திற்கும், 10க்கும் மேற்பட்டவர்கள் அதிர்ச்சி மரணங்களுக்கும் ஆளானார்கள்.
கர்நாடகம் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை கொடுக்க மறுத்தாலும் தென்மேற்கு பருவமழையின் உபரி நீரை பயன்படுத்தி சாகுபடி பணியை தொடங்கி வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் நீரைகொண்டு ஒருபோக சம்பா சாகுபடியை பாதுகாத்து வருகின்றோம்.
இந்த நிலையில் குடிநீருக்குகூட டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாநகராட்சிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களின் முழு குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகின்றது.
கர்நாடக அரசு கடந்த நவம்பர் மாதம் முதல் காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் குடிநீர் என்ற பெயரில் 48 டிஎம்சி தண்ணீரை தேக்கும் கொள்ளளவு கொண்ட புதிய அணைகளை கட்டி தமிழகத்திற்கு தற்போது கிடைத்து வரும் உபரி நீரையும் தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அணை கட்டப்படுமேயானால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்துபோவதோடு 19 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பறிபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கர்நாடக அரசின் அணை கட்டுமானப்பணியினை தடுத்து நிறுத்தி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு ஆகிய இரண்டு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளை உடன் உருவாக்கி தமிழகத்தின் விவசாயத்தையும் குடிநீர் ஆதாரத்தையும் உறுதிபடுத்தி காவிரி நீரை பயன்படுத்தும் சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசின் சார்பில் பாரத பிரதமர் அவர்கள் அவசரகால நடவடிக்கை எடுத்திட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் எதிர்வரும் 28.03.2015 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்றும் அனைத்து கட்சிக்கூட்டத்தின் இந்த முடிவுக்கு தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள், பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒருங்கிணைந்து பாரத பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசின் புதிய அணை கட்டுமான பணிக்கு தடைவிதிக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img