கருப்பர் கூட்டமும் காவிக் கூட்டமும் எங்களுக்கு ஒன்றுதான் என்ற ரீதியில் அதிமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில் வெளியான கருத்து, பாஜக., தொண்டர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று பாஜக., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறி இருந்தார். இதற்கு அ.தி.மு.க. நாளேடான நமது அம்மாவில் பதில் அளிக்கப் பட்டுள்ளது. இது பாஜக.,வினரை ரொம்பவே கடுப்பேற்றியுள்ளது.
அதிமுக நாளேட்டில் வெளியான கட்டுரைக்கு வானதி சீனிவாசன் திங்கள்கிழமை இன்று பதிலளித்துள்ளார். கருப்பர் கூட்டத்தையும் பாஜகவையும் ஒப்பிட்டு அதிமுக கருத்து வெளியிட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று… என்று அவர் இது குறித்து அதிருப்தி வெளியிட்டார்!
ஒரு சமூக விரோத குழுவுடன் தங்களது கட்சியை ஒப்பிட்டு இரண்டும் ஒன்றுதான் என்று அதிமுக குறிப்பிடுவது பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆளும் கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்; இந்தக் கருத்து குறித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்! இது எங்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று பாஜகவினர் கருத்து தெரிவித்தனர்
நமது அம்மா நாளிதழில், எங்களுக்கு கருப்பர் கூட்டமும் ஒன்று தான்; காவிக்கொடி பிடிப்பவர்களும் ஒன்றுதான் என்று குறிப்பிட்டுள்ள கருத்து இரு கட்சிகளுக்கு இடையேயான நட்புறவையும் சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர் பாஜக., தொண்டர்கள்.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியும் அவரது அதிமுக அமைச்சரவைக் குழுவினரும் பாஜகவுக்கு ஒரு செய்தியை சொல்லி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி மற்றும் அவருக்கு நெருக்கமான அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் கட்சியின் பிற முக்கிய அமைச்சர்கள் ஆகியோரின் ஒப்புதல் அல்லது ஆலோசனை இல்லாமல் நமது அம்மா ஆசிரியர் குழுவினர் இத்தகைய கருத்தினை எழுதியிருக்க மாட்டார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நமது அம்மாவின் இந்தக் கருத்தின் பின்னணியில் எடப்பாடி, எஸ் பி வேலுமணி மற்றும் அமைச்சர்கள் சிலருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இத்தகைய கருத்துக்கள் மூலம் மாநில அரசியலில் பாஜகவின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கும் பாஜக., என்பது ஒன்றுமில்லாதது என்று காட்டுவத்ற்கும் ஒரு அரசியல் சித்து விளையாட்டை அதிமுகவின் அதிகார மையம் முன்னெடுத்து வருவதாகவே அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.
திமுக., முன்னர் ஆட்சியில் இருந்த போது, ‘மைனாரிடி திமுக., ஆட்சி’ என்று அப்போது ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவின் அடிமை அரசாங்கம் என்று ஒவ்வொரு முறையும் இப்போது திமுக கூறிக் கொண்டிருக்கிறது. திமுகவின் இந்த விமர்சனத்துக்கு பதில் அளிப்பதற்காக தாங்கள் அவ்வாறு இல்லை என்பதைக் காட்டும் சாக்குப் போக்கில், பாஜகவினரை குறிவைத்து அரசியல் செய்கிறது அதிமுக.,! வேல் யாத்திரையை வேண்டுமென்றே தடை செய்தது, பாஜக தலைவர் எல் முருகனை கைது செய்தது, ஆயிரக்கணக்கான பாஜக.,வினர் மீது வழக்கு பதிவு செய்தது என்று அரசியல் ரீதியாக ஒரு கூட்டணிக் கட்சிக்கு துரோகத்தை செய்து வருகிறது அதிமுக., என்று உறுதியாகக் கூறுகின்றனர் பாஜக., தொண்டர்கள்.
இருப்பினும் பாஜக மாநில தலைவர் முருகன் இந்த விவகாரத்தில் கட்சி தொண்டர்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் அப்படிச் சொன்னாலும், இரண்டாம் மட்டத் தலைவர்கள் பலர் தங்கள் மனவேதனையை உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்!
நமது அம்மா தலையங்கம் மாநிலத்தில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்யும் பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளுக்கு எதிரானது என்று கட்சித் தொண்டர்களும் அடுத்தகட்ட தலைவர்களும் கருதுகின்றனர்.
நாங்கள் சட்ட ரீதியான கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டே வேல் யாத்திரையை மேலே எடுத்துச் செல்ல தயாராக உள்ளோம்! வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆளும் கட்சிக்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால் எங்கள் கட்சியை இந்து மதம் மற்றும் இந்துக் கடவுள்களைப் பற்றி கேவலமான கருத்துக்களை வெளியிட்ட ஒரு சிறிய குழுவுடன் ஒப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று வானதி சீனிவாசன் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்
அதிமுகவின் கருத்தை மறுத்து மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆர் சீனிவாசன் குறிப்பிட்டபோது, இது தவறான புரிதலை வெளிப்படுத்தி இருக்கிறது. வேல் யாத்திரை எந்த ஒரு மதத்திற்கும் சாதியினருக்கும் எதிரானது அல்ல மேலும் யாத்திரைக்கு எதிராக சிறுபான்மையினரின் எதிர்ப்பு எதுவும் இல்லை இது தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை திருத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் கூட்டணிக்கு இடையில் விரிசல் ஏற்படும் என்று கூறப்படுவதை அவர் மறுத்தார்!
ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றாக இணைந்ததாகவும், ஆனால் தங்களுக்கு வெவ்வேறு சித்தாந்தங்களும் கொள்கைகளும் உள்ளன; ஒருவருக்கொருவர் சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்ள எந்த நிர்பந்தமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்! தங்கள் இருவருக்குமே ஒரே நோக்கமாக திமுகவை அதிகாரத்திலிருந்து விலக்கி வைப்பது என்ற ஒன்றே இருந்தது என்பதை அவர் குறிப்பிட்டார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இந்த தலையங்கம் குறித்து கருத்து தெரிவித்த போது தங்கள் மன உணர்வுகளை இது புண்படுத்துகிறது என்றார். இது தேவையற்றது! அதிமுக, கட்சியின் நிலைப்பாடு தான் இந்த தலையங்கம் என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகிறது!அவர்கள் இதை திரும்ப பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி. காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி. : நமது அம்மா நாளிதழில் இன்று. ஹிந்து பெண்களை, ஹிந்து நம்பிக்கைக்களை அவமானப்படுத்தி மத ஒற்றுமையையும், ஒறுமைப்பாட்டையும் குலைக்க நினைக்கும் கருப்பர் கூட்டம் போன்ற கயவர் கூட்டத்தை அடக்கி ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள், காவி கொடி பிடிப்பவர்கள் என்பதை கருப்பு கொடி பிடிப்பவர்களும் சரி, கருப்பு சிவப்பு கொடி பிடிப்பவர்களும் சரி, கருப்பு சிவப்பு வெள்ளை கொடி பிடிப்பவர்களும் சரி, புரிந்து உணர்ந்து நடக்க வேண்டும் என்று காட்டத்துடன் குறிப்பிட்டார் நாராயணன் திருப்பதி!
கட்சியின் துணைத் தலைவர் கே எஸ் நரேந்திரன் திமுகவினரால் ஆதரிக்கப்பட்ட சமூகவிரோத சக்திகளுடன் எங்களை ஒப்புமைப் படுத்தி, அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றார்.
எப்படி ஆகிலும், அதிமுக.,வின் அண்மைக் கால நடவடிக்கைகளைக் கண்டும், பாஜக., தலைமை அதிமுக., தலைவர்களுடன் சமரசமாகிப் போவது போல் நடந்து கொண்டாலும், தொண்டர்கள் மனநிலை கொந்தளிப்புடனேயே இருக்கிறது என்பது இன்றைய சமூகத் தளங்களின் கருத்துகளில் எதிரொலித்தது.