
பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கும் இடத்தில் இருந்து ஆண்டாள் திருக்கோயில் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.
பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது… பெட்ரோல் டீசல் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்! சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்! இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் எத்தனால் கலந்த எரி பொருளை விற்பதற்கு அனுமதிக்க வேண்டும். தமிழக அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து இருக்கின்ற காரணத்தால் அதற்கேற்ப இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
சமையல் எரிவாயு உருளை விலை உயர்ந்து கொண்டே செல்வது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். சமையல் எரிவாயு விலை வாசி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இது விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் சார்பில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுவும் அனுப்பி வைக்கப்பட்டது… என்று குறிப்பிட்டார் அர்ஜுன் சம்பத்.