
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோவிலில் கடந்த மார்ச் மாதம் 20-ஆம் தேதியில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 9 மாதங்களுக்கு பின் திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று பிற்பகல் 12 மணி முதல் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதை அடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சியோடு கடற்கரையில் புனித நீராடினர்.
கடலில் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டாலும், நாழிக் கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை தொடர்வதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது!
பாஜக., நடத்திய வேல் யாத்திரையின் போது, கொரோனா காரணம் காட்டி, கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறி, வேல் யாத்திரைக்கு பல்வேறு தடைகளை விதித்த தமிழக அரசு, வேல் யாத்திரை முடிந்த மறு வாரமே கூட்டங்கள் கூடுவதற்கும், அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், திருச்செந்தூர் கடற்கரையில் பொதுமக்கள் கூடவும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
பாஜக., நடத்திய வேல் யாத்திரை நிறைவுற்ற ஒரு வாரத்தில் கொரோனா அச்சம் அரசால் விலக்கப் பட்டுள்ளதும், கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்காக கொரானாவே தமிழகத்தில் இருந்து அரசால் துரத்தப் பட்டுள்ளதும் மெய்சிலிர்க்கும் அதிசயங்களாகவே பார்க்கப் படுகின்றது.