
கட்டுரை: கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன்,
ஆசிரியர், கலைமகள்
தமிழக அரசின் சின்னமாகத் திகழ்வது, ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம். ஸ்ரீவில்லிபுத்தூர் என்று சொன்னதுமே நமக்கு இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். முதலாவது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள். இவர் தமிழை ஆண்டவர். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகத் திகழ்பவர். திருப்பாவை தந்த கோதை நாச்சியார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றதும் ஞாபகத்திற்கு வரும் அடுத்த விஷயம் பால்கோவா. எப்படி திருநெல்வேலி அல்வா உலகப் பிரசித்தமோ அதுபோன்றே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவும் உலக பிரசித்தமானது.
திருப்பாவை, நாச்சியார் திருமொழி என இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார் ஆண்டாள். திருப்பாவை முப்பது பாடல்களையும், நாச்சியார் திருமொழி 143 பாடல்களையும் கொண்டது. ஆழ்வார்களின் பாடல்களை பாசுரங்கள் என்பார்கள்.

பூமி பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படுகிறார் ஆண்டாள். இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. ஆண்டாளின் இடது கையில் ஒரு கிளி இருப்பதை நாம் தரிசிக்கலாம். இது ஒவ்வொரு நாளும் புதிதாக செய்யப்பட்டு ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
மாதுளை மரத்தின் பூக்கள் கிளியின் அலகு மற்றும் வால்பகுதி செய்வதற்கும், மூங்கில் குச்சிகள் கால் பகுதிக்கும், வாழை இலை நந்தியாவட்டை மரத்தின் இலைகள் உடல் பகுதி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படித்தான் இன்றுவரை தினசரி கிளிகள் செய்யப்பட்டு ஆண்டாளின் இடது கையில் சமர்ப்பிக்கப் படுகிறது!
ஆடி மாத சுக்லபட்ச சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் என்கிற விஷ்ணுசித்தர் நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழே அழகிய பெண் குழந்தையைக் கண்டார். அத்தெய்வீகக் குழந்தையை எடுத்து தன் மகளாக வளர்க்கிறார். கோதை என்று பெயர் இடுகிறார். இந்த கோதை நாச்சியார் தான் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாக அழைக்கப்பட்டார். அதற்குக் காரணம் கண்ணனை எண்ணி தவமிருந்து அவரையே மணாளன் ஆக்கியது தான்!

திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டது. மார்கழி முதல் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் வீதம் இப்போது பாடி வருகிறார்கள். இந்த நாட்களில் திருப்பதியில் கூட சுப்ரபாதம் இசைக்கப் படாமல் ஆண்டாள் அருளிய திருப்பாவை இசைக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.
எல்லா வைணவ ஆலயங்களிலும் மார்கழி முழுவதும் திருப்பாவை முழக்கம் இருப்பதைக் கேட்டு உணரலாம். திருப்பாவை ஒழுங்குமுறையைக் கொண்டு வந்தவர் ஸ்ரீமத் ராமானுஜர். இவரை திருப்பாவை ஜீயர் என்பார்கள்.
ஸ்ரீரங்கத்தில் இருந்தாலும் சரி காஞ்சிபுரத்தில் இருந்தாலும் சரி திருக்கோட்டியூரில் இருந்தாலும் சரி எப்போதும் ராமானுஜரின் வாய் திருப்பாவையை பாடியபடி இருக்கும். திருக்கோட்டியூரில் வழக்கம்போல் ஒரு நாள் காலை வேளையில் வீதி வழியாக பிட்சை எடுப்பதற்காக கிளம்புகிறார்… திருப்பாவை பாடலைப் பாடியபடி. 18வது பாசுரம் கடைசி வரி, ‘வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்…’ என்று பாடிக் கொண்டு ஸ்ரீமத் ராமானுஜர் வரும்போது திருக்கோட்டியூர் நம்பிகளின் மகள் அத்துழாய், கையில் வளையல் அணிந்தபடி பிட்சை அளிக்க முற்படுகிறார். அது கண்ட ஸ்ரீமத் ராமானுஜர் சாட்சாத் ஆண்டாளே முன் வந்து நின்றதாக எண்ணி அவளை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார். அத்துழாயை சிறு குழந்தை என்று கூட எண்ணாமல் அவருடைய கண்ணுக்கு அவள் ஆண்டாளாகவே தெரிந்தாள் என்றால் கோதை நாச்சியார் மீது அவர் கொண்ட பக்தி அத்தகையதாக, அளவிடற்கரியதாக இருந்தது!

மார்கழி மாதம் அதிகாலை வேளையில், ஆண்டாள் நாச்சியார் பெண்களையெல்லாம் அழைத்துக் கொண்டு நீராடச் செல்வதாக கற்பனையில் எழுந்த பக்தி கீதமே திருப்பாவை. வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 473-503 வரை உள்ள 30 பாடல்களாக திருப்பாவை வைக்கப்பட்டுள்ளது. கீதையில், வேதத்தில் என்ன உட்பொருட்கள் மறைந்திருக்கிறது அவை அத்தனையும் கோதையின் திருப்பாவையில் இருக்கிறது என்பதுதான் பலமான நம்பிக்கை.
சிவபெருமானை தலைவனாக நினைந்து, அதிகாலை நேரத்தில் துதிக்கப்படும் பாடல்கள் திருவெம்பாவை. மாணிக்கவாசகர் இயற்றிய 20 பாடல்களே திருவெம்பாவை. இதனுடன் திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் பத்தும் சேர்த்து முப்பது பாடல்களாக, மார்கழி மாதக் காலை வேளையில் சைவர்கள் பாடி சிவனின் அனுக்கிரகத்தைப் பெறுகிறார்கள்.
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர். திருவாசகம், திருக்கோவையார் ஆகியவை இவர் எழுதிய நூல்கள். இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக இருந்தவர். திருவாதவூர் இவர் அவதரித்த ஊர். தென்னவன், பிரமராயன் ஆகிய பெயர்களும் இவரையே குறிக்கும்.
நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி, ஈசன் திருவிளையாடலால் உலகு உணர்ந்து கொண்ட, மாணிக்கவாசக நாயனார் இயற்றியவை எட்டாம் திருமுறையாக வைக்கப் பட்டு, சைவர்களால் வழிபடப்பட்டு வருகிறது.
நரியைக் குதிரைசெய் என்னும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் என்று சொல்லலாம். இப்படித்தான் அபிதான சிந்தாமணி கூறுகிறது.
கூட்டமாக சத் விஷயங்களை சொல்லியபடியே அல்லது பாடியபடியே நீராடச் செல்வது என்பது புனிதமானது.
அக்காலத்தில் கார்த்திகை மாதத்தில் மலைகளில் உள்ள சுனைகளில் முருகனை வேண்டி நீராடும் வழக்கம் மக்களிடம் இருந்தது. அதேபோன்று மார்கழி மாதம் குளங்களில் நீராடுவதும் தை மாதத்தில் ஆறுகளில் நீராடுவதும் மாசி மாதத்தில் கடலில் நீராடுவதும் வழக்கமாக இருந்தது. இம்மாதங்களில் நடராஜப் பெருமானும் சப்பரத்தில் எழுந்தருளி நீராட ஊர்வலமாகச் செல்வதுண்டு.
மார்கழி பௌர்ணமி அன்று (மிருகசீர்ஷ நட்சத்திரம்) நீராடல் ஆரம்பித்து பூச நட்சத்திரம் அன்று நீராடல் நிகழ்ச்சி நிறைவுபெறும். மாதத்தின் நடுவிலோ அல்லது கடைசியில் பௌர்ணமி வந்தாலோ என்ன செய்வது? என்று எண்ணியே மார்கழி முதல் தேதி முதல் நீராடல் வைபவம் இப்போது பழக்கத்தில் வந்துள்ளது. ஆண்டாளின் முதல் பாடல் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்நாளில்…… என்றுதான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டாள் தன் மனத்தில் திருவாய்ப்பாடியைக் கண்டு, தன்னை இடைப்பெண்ணாகவே பாவித்து, தாம் ஆய்ப்பாடியில் வாழ்வது போலும், தன்னை ஒத்த சிறுமியர் கோபியர் போலும் எண்ணி, வடபெருங்கோயிலுடையானை ஆலிலையில் துயின்ற கண்ணனாகக் கருதி திருப்பாவை பாடி நோன்பு நோற்றார்.
மாணிக்கவாசகரோ திருவண்ணாமலையில் இருந்த காலகட்டத்தில் காலை வேளையில் மகளிர் ஒருவரை ஒருவர் துயில் எழுப்பி கூட்டமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு குளக்கரைக்கு செல்வதைப் பார்த்தவர். சிவ இறை உணர்வால் முதல் எட்டு பாடல்களில் சிவன் புகழைச் சொல்லியபடி பெண்கள் நீராடச் செல்வதையும் ஒன்பதாவது பாடலில் வேண்டுதலையும் பத்தாவது பாடலில் நீராடுவதையும் செவ்வனே மொழிந்துள்ளார். கன்னிப்பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாகவே இந்தப் பாடல்களைப் பார்க்க வேண்டும்.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அதாவது இன்றைய ஆவுடையார் கோவிலில் எழுந்தருளி இருந்தபோது விடியற்காலத்தில் இறைவனைத் துயிலெழுப்புவதற்காக திருப்பள்ளி எழுச்சி என்னும் பத்து பாடல்களை அருளினார். திருவெம்பாவை இருபது பாடல்களும் திருப்பள்ளி எழுச்சி பத்து பாடல்களும் சேர்ந்து முப்பது பாடல்களாக சைவர்களால் மார்கழியில் இசைக்கப்படுகிறது.
மார்கழி மாத திருவாதிரை விழா பத்து நாட்களும் திருவெம்பாவை ஓதுதல் என்பது சைவ மரபு. இரண்டாம் ராஜேந்திர சோழனின் (கிபி 1057) திருக்கோயிலூர் கீமூர் வீரேட்டேஸ்வரர் கோயில் கல்வெட்டில் மார்கழி திருவாதிரை விழாவில் திருவெம்பாவை ஓதப்பட்டதும் அதற்கு நிபந்தம் அளித்த செய்தியும் உள்ளது. தொல்பொருள் ஆய்வறிக்கை 1905 எண்12.
ஆகவே திருக்கோவில்களில் திருப்பாவை திருவம்பாவை தொன்று தொட்டு ஓதப்பட்டு வருவதை அறிகிறோம். பின்னர் பல கோவில்கள் சிதைவு கண்ட நிலையில் இப்பழக்கம் விட்டுப் போயுள்ளது. பின்னாளில் காஞ்சி மஹாஸ்வாமிகள் சைவ வைணவ பேதமின்றி கோவில்களில் திருப்பாவை திருவெம்பாவை காலைநேரத்தில் ஒலிக்கப்பட வேண்டுமென்று பக்தர்களுக்கு அன்புக் கட்டளையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவெம்பாவையின் சிறப்பு, வெளிநாட்டு அரசு பட்டாபிஷேக நிகழ்ச்சியிலும் இடம்பெற்றிருக்கிறது என்பது தமிழர்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயம். தாய்லாந்தில் இன்றுவரை அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும்போது திருவெம்பாவை இசைக்கப்படுகிறது. இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை இரண்டின் உன்னத சிறப்புகளை அறிந்து இறைவனை எண்ணித் துதித்து அவன் தாள் வணங்கி உய்வோம் !!
- கலைமகள் ஜனவரி 2021 இதழில் இடம்பெறும் கட்டுரை