
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
64. தடை கண்டு அஞ்சாதே!
ஸ்லோகம்:
ப்ராரப்யதே ந கலு விக்னபயேன நீசை:
ப்ராரப்ய விக்னனிஹதா: விரமந்தி மத்யா: |
விக்னை: புன:புனரபி ப்ரதிஹன்யமானா:
ப்ராரப்தமுத்தமகுணா: ந பரித்யஜன்தி ||
– பர்த்ருஹரி நீதி (73)
பொருள்:
கீழ் மனிதர்கள் சமுதாய நலனுக்குப் பயன்படும் செயல்களைத் தொடங்குவதற்கு, ஏதாவது தடை ஏற்படுமோ என்று அஞ்சுவர்.
நடுத்தர மனிதர்கள் பணியை தொடங்கி விட்டு எந்த சிறு சவால் எதிர் வந்தாலும் நடுங்கி வேலையை நிறுத்தி விடுவார்கள். உத்தமர்கள் மட்டுமே எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தாண்டி வேலையை செய்து முடிப்பார்கள்.
விளக்கம்:
எந்த வேலையானாலும் தொடங்கினால் பலன் கிடைக்காதோ என்னவோ என்று அச்சம்… இறுதிவரை செய்ய முடியுமோ முடியாதோ என்ற சந்தேகம்… இவற்றால் சிலர் எந்த வேலையும் செய்யத் தொடங்க மாட்டார்கள்.
பணியைத் தொடங்கி விட்டு பாதியில் நிறுத்தி விடுவார்கள் வேறு சிலர். மிகச் சிலர் மட்டுமே அனைத்து மேடு பள்ளங்களையும் சகித்துக்கொண்டு முன்னேறுவர். நினைத்ததை சாதிப்பர். இம்மூவரின் குணங்களையும் கூறும் சுலோகம் இது.
தடைகளை வென்று இலக்கை அடைவதில் ஓய்வின்றி உழைத்து நினைத்ததை சாதிப்பது உயர்ந்தவர்களின் இயல்பு. அத்தகைய உயர்ந்தவர்களின் பட்டியலில் நாம் உள்ளோமா?
ஒரு சம்பவத்தின் போது மூன்று மனிதர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று பார்ப்போம். ஓரிடத்தில் நேர்ந்த விபத்தில் ஒருவர் தீவிரமாக காயம் அடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றும் வேலை நமக்கு எதற்கு… தலைவலி… என்று ஒருவர் அங்கிருந்து விலகி விட்டார். அடுத்தவர் உதவி செய்ய எண்ணினாலும் மருத்துவமனை, போலீஸ், வழக்கு போன்றவை நினைவுக்கு வந்து செய்யாமல் விட்டார். உயர்ந்த மனிதர் மட்டும் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி உயிர் காத்தார்.
சமுதாய நலனுக்காக ஏதாவது பணி செய்ய வேண்டி வந்தால் எதிர்ப்படும் தடைகளைக் கண்டு அஞ்சாதவரே சான்றோர் எனப்படுவர்.