குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க உள்ள ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரி சென்றார். அங்கு ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சின்னத்துறை கிராமத்திற்கு சென்றார்.
அங்கு ஏராளமான மீனவர்கள் மற்றும் புயலில் பலியானவர்களின் உறவினர் கள் கூடி இருந்தனர். அவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசியதாவது:-
புயல் பாதிப்பு நடந்து உடனடியாக வர முடியாததற்கு வருத்தமாக இருக்கிறது.குஜராத் தேர்தல் இருந்ததால்தான் தன்னால் உடனடியாக இங்கு வரமுடியவில்லை.
நாடு முழுவதும் மீனவர்கள் துயரத்தில் உள்ளனர். அவ்வப்போது புயல் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் மீனவர்கள். மேலும் தந்தை, சகோதரரை இழந்த மீனவ பெண்களை சந்தித்தேன்.
இதற்கு நிவாரணம் வழங்கினால் மட்டும் போதாது. சொந்தங்களை பறி கொடுத்த மீனவர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும், நான் ஆதரவாக இருப்பேன்.
ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.



