ஏப்ரல் 20, 2021, 3:45 மணி செவ்வாய்க்கிழமை
More

  இறைவனை யார் காணலாம்? ஆச்சாரியாள் பதில்!

  abinav vidhya theerthar - 1

  சிஷ்யர்: ஈஸ்வரனை பார்க்க முடியாததால் சிலர் உண்மையில் ஈஸ்வரன் இருக்கிறானா, இல்லையா என்பதில் சந்தேகம் அடைகிறார்கள். அவர்களின் மனதில் சிரத்தையை உண்டாக்குவதற்காக இறைவன் எப்படியாவது தானிருப்பதை அவர்களுக்குக் காட்ட முடியாதா?

  ஆச்சாரியாள்: இறைவனே ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான் போலிருக்கிறது. அவன் ஒருவனுக்குக் காட்சியளிக்க விரும்பினால் ஏதோ ஒரு உருவத்தைபா பெற்றுக்கொள்ளவேண்டும். உருவத்தைக் கண்டவுடன் சந்தேகமுள்ளவன் உனக்கு உருவம் இருக்கிறது. இனி எல்லா இடத்திலும் இல்லை. அதனால் இறைவனாக இருக்க முடியாது என்று கூறி விட வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் இறைவன் அவர்களுக்கு முன்பு உருவத்தை பெற்றுக்கொண்டு தரிசனம் தராமல் இருந்தால் சந்தேகமிருப்பவர்களில் வேறு சிலர் நாம் இறைவனைக் காண முடிவதில்லை ஆகையால் இறைவன் என்று ஒருவன் இல்லை என்று நினைத்துக் கொள்ளலாம். ஆக இறைவன் உருவத்தைப் பெற்றுக் கொண்டாலோ இப்படி சிலர் ஈஸ்வரன் இருப்பதை நம்பாமல் இருக்கிறார்கள். இச்சூழலில் இறைவன் என்னதான் செய்ய முடியும்?

  உலகில் வேற்றுமை இருக்கிறது ஆகையால் நாத்திகர்களின் கோஷ்டியும் இருக்கிறது. சிரத்தையை மக்களிடம் உண்டாக்கலாம். மேலும் வளர்க்கலாம். ஆனால் பலாத்காரமாக ஒருவன் மனதில் சிரத்தையை உண்டாக்குவதற்காக முயற்சி செய்வதில் பிரயோஜனமில்லை. யுத்திகளைக் கூறலாம். பல பக்தர்களின் உண்மையான அனுபவங்களை எடுத்துக்காட்டலாம். பல அபூர்வமான உண்மை நிகழ்ச்சிகளையும் உதாரணங்களையும் கொடுக்கலாம். சாத்திரங்களில் தெரியப்படுத்தப்பட்டதையும் கூறலாம். ஆனால் இறைவன் இருக்கிறான் என்று ஒருவன் நம்பாவிட்டால் யார் என்ன செய்ய முடியும்?

  சிஷ்யர்: இறைவனைப் பக்தன் காணமுடியுமா?

  ஆச்சார்யாள்: உருவத்துடன் காணலாமா என்று கேட்கிறாயா?

  சிஷ்யர்: ஆம்

  ஆச்சாரியாள்: இறைவனுக்கு உருவம் இல்லா விட்டாலும் பக்தர்களுக்காக அவன் உருவத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆதலால் அளவில்லாத பக்தி இருந்தால் இறைவன் பெற்றுக் கொண்ட உருவத்தை நாம் நிச்சயமாகப் பார்க்கலாம். இங்கு சந்தேகத்திற்கு இடமில்லை.

  சிஷ்யர்: இறைவன் பெற்றுக் கொண்ட உருவத்தை வெறும் மனதால் பார்க்க முடியும் என்று சொல்கிறீர்களா அல்லது கண்களால் காணமுடியும் என்று சொல்கிறீர்களா?

  ஆச்சாரியாள்: இரண்டு வகையிலும் காட்சியளிப்பதற்கு இறைவன் சாமர்த்தியம் உள்ளவன்.

  சிஷ்யர்: அதாவது இறைவனை பார்க்கலாம் இறைவனிடம் பேசலாம் இறைவனை தொடலாம் என்பதையா ஆச்சாரியாள் கூறுகிறீர்கள்?

  ஆச்சாரியாள்: ஆம் அவ்வளவு பக்தியிருந்தால் இறைவன் காட்சி அளிப்பார். காட்சியளித்தால் அவனிடம் ஏன் பேச முடியாது?

  சிஷ்யர்:கலியுகத்திலுமா அவ்வாறு செய்யலாம்?

  ஆச்சார்யாள்: இறைவனைப் பக்தியுள்ளவன் காண்பதற்கும் கலியுகத்திற்கும் என்ன சம்பந்தம் ?

  சிஷ்யர்: எவன் இறைவனின் தரிசனத்தைப் பெறலாம்?

  ஆச்சாரியாள்: எவன் இறைவனைத் தவிர வேறொன்றையும் விரும்பவில்லையோ அவன் இறைவனைக் காணலாம். அளவில்லாத பக்தி இறைவனை நம்மிடம் வரும்படிச் செய்கிறது.

  சிஷ்யர்: இறைவன் விஷயத்தில் ஒருவனுக்கு ஏற்பட்ட அனுபவம் உண்மையா இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு அறிய முடியும்?

  ஆச்சாரியாள்: எவனுக்கு உண்மையான அனுபவம் ஏற்பட்டிருக்கிறதோ அவனுக்கு இது போன்ற சந்தேகம் ஏற்படாது.

  சிஷ்யர்: மற்றவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு அவனுடைய அனுபவம் சித்தப்பிரமையினாலோ தனக்கு தானே ஏமாற்றிக் கொண்டதாலோ இருக்கலாம் என்று கருதலாமே?

  ஆச்சாரியாள்: எவனுக்கு அனுபவம் ஏற்பட்டிருக்கிறதோ மற்றவர்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலோ அவனுக்கு என்ன நஷ்டம்? மக்கள் ஒப்புக் கொள்வதோ மக்கள் ஒப்புக் கொள்ளாமலிருப்பதோ அனுபவம் அடைந்தவனின் அனுபவத்தை ஒரு வகையிலும் பாதிப்பதில்லை. இப்படி இருந்தாலும் உன் கேள்விக்கு சற்று நேரடியான பதில் கூறுகிறேன். இறைவன் பக்தனுக்குக் காட்சியளிக்கும் போது பழமோ மற்ற பொருட்களை கொடுத்து விட்டுப் போகிறான் என்று வைத்துக்கொள்வோம். இறைவன் மறைந்த பிறகும் பழம் சிஷ்யனுக்கு இருந்தால் அவ்வனுபவம் உண்மையானது என்று அறிந்து கொள்ளலாம். இது போன்ற அனுபவம் பக்தனின் மனநிலையை மாற்றிவிடும். அனுபவம் சற்று நேரத்திற்கே இருந்தாலும் அதன் பலன் நீண்ட காலம் இருக்கிறது. மேலும் இறைவனின் விஷயத்தில் அனுபவம் பெற்றுக்கொண்டவர்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதற்குச் சாமர்த்தியம் உள்ளவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

  இறைவன் விஷயத்தில் அனுபவம் பெற்ற ஒருவன் நல்ல ஆரோக்கியத்துடனும் மனநிலையும் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் அவனுக்கு திடீரென்று சித்தபிரமை ஏன் வரவேண்டும் ? ஒருவன் தனக்கு தானே ஏமாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றிக் கொள்ளலாம். ஒருவனுக்கு விசேஷமான அனுபவங்கள் எப்போது வேண்டுமானாலும் கிடைப்பதில்லை. இம்மாதிரி ஆராய்வதன் மூலம் உண்மையான அன்பும் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்கு உள்ள வித்தியாசத்தைக் காணலாம்.

  சிஷ்யர்: இவ்வுலகில் இவ்வளவு துன்பங்கள் எதற்காக இருக்கின்றன? இவ்வுலகை இறைவன் படைத்ததால் துன்பங்களுக்கு அவன் காரணமாக மாட்டானா?

  ஆச்சாரியாள்: ஒருவன் தான் செய்த செயல்களால் தான் துன்பங்களை அனுபவிக்கிறான். ஒருவனது செயல்கள் பலனளித்தேத் தீரவேண்டும். இம்மாதிரி முற்பிறவியில் செய்யப்பட்ட கர்மா பலனளிப்பதால் ஒருவன் இப்பிறவியில் துன்பங்களை அனுபவிக்கிறான். மனிதர்களுக்கு சாஸ்திரங்களின் கட்டளையைப் பின்பற்றி வாழ்வதற்கோ சாஸ்திரங்களின் கட்டளையை மீறுவதற்கோ சுதந்திரம் இருப்பதால் இறைவன் துன்பங்களுக்குக் காரணம் என்று சொல்வது தவறு. மனிதன் தன் செயல்களின் பலனாக புண்ணியத்தையோ பாவத்தையோ அடைகிறான். இறைவன் செயல்களின் பலன்களை அளிக்கிறான் அவ்வளவு தான். முற்பிறவியில் செய்த பாவம் தான் நமக்கு இப்பிறவியில் துன்பம் உண்டாகிறது எனச் சொன்னால் முற்பிறவியில் ஒருவன் துன்பம் அனுபவிப்பதற்கு காரணம் என்ன என்று கேட்கத் தோன்றலாம். இதற்கு பதில் அதற்கும் முற்பிறவியில் செய்த கர்மா என்பதேயாகும். ஸம்ஸாரத்திற்கு ஆரம்பம் இல்லாததால் நாம் ஒரு விதமான கர்மாவும் செய்யாமல் வாழ்க்கையை ஆரம்பித்த போதிலிருந்த முதல் பிறவி எது எனக் கேட்பது சரியாகாது. முன் கல்பத்தில் இருந்ததை இறைவன் ஒவ்வொரு கல்பத்தைக் படைக்கும்போதும் வெளிப்படுத்துகிறானேத் தவிர புதிதாக தானாகவே ஒன்றும் உண்டாக்குவதில்லை.

  சிஷ்யர்: இறைவன் நடந்ததையும் நடப்பதையும் நடக்கப் போவதையும் அறிந்தவனென்று கூறப்பட்டுள்ளது. இறைவன் மனிதர்களுக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்து கொண்டவனாகியிருந்ததால் மக்கள் என்ன செய்வார்கள் என்பதும் இப்போதே தீர்மானமாயிருக்க வேண்டும் அப்படி இருந்தால் விதியின் கட்டளையின்படி தானே மனிதன் நடந்தாக வேண்டும்? விதியின் கட்டளைப்படி நடக்காமல் மீறி நடந்து கொள்ளலாமென்றால் இறைவனால் நடக்கப்போவதை தீர்மானிக்க முடியாது என்று ஆகும். அப்படி இருந்தால் இறைவன் எல்லாவற்றையும் அறிந்தவன் என்று எப்படிக் கூறுவது?

  ஆச்சாரியாள்: உண்மையில் உலகம் மாயையால் ஏற்பட்டிருக்கிறது. இறைவன் மாயையை ஆள்பவன். எல்லாம் இறைவன் விருப்பப்படியே நடைபெறுவதால் அவன் விருப்பத்திற்கு இணங்கி தான் இருக்கிறது. அவனின் விருப்பம் தான் மனிதர்களின் சொந்த இச்சையைப் போலும், விதியை போலும் தெரிகிறது. இவ்வாறு கருதினால் இறைவன் எல்லாவற்றையும் அறிந்து கொண்டவன் மேலும் விதியின் படியே எல்லாம் நடைபெற வேண்டியதும் இல்லை என்ற இரண்டையும் குழப்பம் இல்லாமல் புரிந்து கொள்ளலாம்.

  ஒருவன் தன் பரீட்சைக்காக படிக்கவேயில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்டவன் தேர்வில் வெற்றி பெற மாட்டான் என்பதை நிச்சயமாகக் கூற முடியாதா? இதே போல் ஒருவன் கூற முடியும் என்பதால் மாணாக்கனுக்கு தேர்வுக்கு முன்னர் படிப்பதற்கு அல்லது படிக்காமல் இருப்பதற்கோ சுதந்திரம் இல்லை என்று கூறமுடியுமா? நிச்சயம் முடியாது. அதே போல் தான் இறைவன் தான் படைத்தது அனைத்தையும் நன்கு புரிந்து கொண்டிருக்கிறான் என்று கருதினாலும் இறைவன் எல்லாவற்றையும் அறிந்தவன் என்றே கூறுவதில் கஷ்டம் ஒன்றும் இருக்காது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »